ரஜினிகாந்திடம் பாராட்டு பெற்ற‘கே.கே.கே’ இயக்குநர் அடுத்த படம் - ஹீரோ இவர் தான்

துல்கர் சல்மான், ரிது வர்மா, இயக்குநர் கெளதம் மேன ஆகியோரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்றது.
இதற்கிடையே, சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசி மூலம் பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு கூறினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், இந்த ஆடியோ வெளியானது குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி வருத்தம் தெரிவித்தார்.
ரஜினிகாந்தே தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க, என்று தேசிங்கு பெரியசாமியிடம் கூறியதால், அவர் மீது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி திரையுலகினருக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இதனால், அவரது அடுத்தப் படம் எந்த ஹீரோவுடன் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி தனது அடுத்தப் படத்திற்கு தயாராக தொடங்கிவிட்டார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்கிறார். தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துவிட்டதாம். உடனே, முழு திரைக்கதையையும் தயார் செய்ய சொல்லிவிட்டாராம். தற்போது வெளியூரில் தங்கில் திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருக்கிறாராம்.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன் தேசிங்கு பெரியசாமி - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.