Apr 05, 2019 10:52 AM

தமிழில் ரீமேக்காகும் ஆஸ்கர் விருது படம்!

தமிழில் ரீமேக்காகும் ஆஸ்கர் விருது படம்!

1997 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்றதோடு, பல சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்கேற்று 10 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’. (childrenச் of heaven) உலகம் முழுவதும் இப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்படம் தற்போது தமிழில் ‘அக்கா குருவி’ என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது.

 

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘மிருகம்’ மற்றும் ‘சிந்துசமவெளி’ படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட சாமி இயக்குகிறார். தமிழக ரசிகர்களுக்காக இந்த இப்படத்தில் பல கூடுதல் காட்சிகளை சாமி இணைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை வேடத்திற்காக 200 க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனையும், டாவியா என்ற சிறுமியையும் படக்குழு தேர்வு செய்துள்ளது. இவர்களுடன் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடிக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ஒரு ஜோடி காலணியும் (Shoes) படத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

கொடைக்கானல் மற்றும் அதன் அருகே உள்ள பூம்பாரை கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 55 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று, ஒவ்வொரு நாளும் மூன்று கேமராக்களைக் கொண்டு காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

 

உப்பல் வி.நாயனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வீரசமர் கலையை நிர்மாணிக்க, மணிகண்டன் சிவகுமார் எடிட்டிங் செய்துள்ளார்.

 

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் ‘அக்கா குருவி’ படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.