Apr 04, 2019 11:16 AM

டாக்டர் பட்டம் பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன்!

டாக்டர் பட்டம் பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாப்டா திரைப்பட பயிற்சி மையத்தின் நிறுவனருமான தனஞ்செயனுக்கு மும்பை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

 

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவி வகித்த தனஞ்செயன், ’இறுதிச் சுற்று’, ‘அஞ்சான்’, ‘புறம்போக்கு’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருப்பதோடு, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். மேலும், ’இவன் தந்திரன்’, ‘யு டர்ன்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களை விநியோகமும் செய்திருக்கிறார்.

 

திரைப்படங்கள் தயாரிப்பதோடு, சினிமாத் துறை மற்றும் அதன் வியாபாரம் குறித்து புத்தகம் எழுதியிருப்பவர், 80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றையும் புத்தகமாக எழுதியிருக்கிறார். அதே போல், சினிமா துறையின் வியாபாரம் மற்றும் திரையுலக ஜாம்பவான்கள் சிலரைப் பற்றி டாக்குமெண்ட்ரி படங்களையும் எடுத்திருக்கிறார்.

 

தனஞ்செயன் தமிழ் சினிமாவின் வரலாறு குறித்து எழுதிய ‘பிரைட் ஆப் தமிழ் சினிமா’ புத்தகத்திற்கு சிறந்த புத்தகத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதோடு, சிறந்த விமர்சகருக்கான தேசிய விருதும் அவர் பெற்றிருக்கிறார்.

 

தற்போது நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் தனஞ்செயன், ’உத்தரவு மகாராஜா’, ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர், பாப்டா என்ற பெயரில் திரைப்பட பயிற்சி மையம் ஒன்றையும் நிறுவி நடத்தி வருகிறார்.

 

இப்படி, முழுவதுமாக சினிமா துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தனஞ்செயன், ”இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு செய்ய வேண்டியவை” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை மேற்கொண்டார்.

 

தற்போது, இந்த ஆய்வறிக்கைக்காக மும்பை கல்கலைக்கழகம் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

 

Producer Dhanajayan

 

டாக்டர் பட்டம் பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு cinemainbox.com சார்பில் வாழ்த்துகள்.