Apr 10, 2019 02:55 PM

பேய் காதலை சொல்ல வரும் ‘பியார்’!

பேய் காதலை சொல்ல வரும் ‘பியார்’!

தமிழ் சினிமாவின் நிரந்தரமான டிரெண்டாக பேய் படங்கல் மாறிவிட்டது. வாரம் இரண்டு பேய் படங்கள் வெளியானாலும், மக்கள் சலிப்படையாமல் தொடர்ந்து பேய் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதால், பேய் படங்களை எப்படி எல்லாம் வித்தியாசமாக எடுக்கலாம் என்று, இயக்குநர்கள் பலர் வெளிநாடுகளில் ரூம் போட்டு யோசிக்கிறார்களாம்.

 

ஆனால், அப்படி வெளிநாட்டுக்கெல்லாம் போகாமல், உள்ளூரிலேயே யோசித்து இயக்குநர் ஒருவருக்கு, அவரது முதல் படம் முடியும் முன்பே இரண்டாம் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 

அவர் தான், ‘சண்டி முனி’ படத்தை இயக்கும் மில்கா எஸ்.செல்வகுமார். ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக இருந்த இவர் இயக்கும் ‘சண்டி முனி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்க, அதற்குள் இரண்டாவது படத்தில் கமிட்டாகிவிட்டார். 

 

விண்டோபாய் பிக்சர்ஸ் வி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பியார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது காதல் படம் தான், ஆனால் பேய் காதல் படம்.

 

இதில், முன்னணி நடிகர் ஹீரோவாகவும், முன்னணி நடிகை ஹீரோயினாகவும் நடிக்க இருக்கிறார்கள். தற்போது அவர்களிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

 

என்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.கே.ரிஷால் சாய் இசையமைக்கிறார். வ.கருப்பன் பாடல்கள் எழுத, ரமேஷ் வேலுகுட்டி எடிட்டிங் செய்கிறார். அசோக் ராஜா நடனம் அமைக்க, சூப்பர் சுப்பராயன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். முத்துவேல் கலையை நிர்மாணிக்கிறார்.

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் மில்கா எஸ்.செல்வகுமார், “வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத் தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

 

ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். ஊட்டி, குன்னூர், பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.” என்றவரிடம், ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தில் கமிட் ஆனது எப்படி, என்று கேட்டதற்கு, “சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை ’பியார்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான்  திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன்.” என்றார்.

 

Director Milka Selvakumar

 

இயக்குநர் மில்கா எஸ்.செல்வகுமாரின் ‘சண்டி முனி’ படத்தில் நட்டி ஹீரோவாகவும், மனிஷா யாதவ் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இதுவும் ஒரு ஹாரர் படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.