Apr 09, 2019 10:23 AM

ஜெ-சசி இடையிலான தொடர்பின் ரகசியத்தை சொல்ல வருகிறது ‘சசிலலிதா’

ஜெ-சசி இடையிலான தொடர்பின் ரகசியத்தை சொல்ல வருகிறது ‘சசிலலிதா’

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலர் களம் இறங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டியும், ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க களத்தில் இறங்கியுள்ளார்.

 

இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயம் மூவிஸ் என்ற நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து, அனைத்து இந்திய மொழிகளிலும் அதை வெளியிட்டும் இருக்கிறார்.

 

ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால், அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெகதீஸ்வர ரெட்டி, அப்படத்திற்கு ‘சசிலலிதா’ என்று தலைப்பு வைத்திருப்பதோடு, பாதி முகம் ஜெயலலிதாவாகவும், பாதி முகம் சசிகலாவாகவும் இருப்பது போன்ற பஸ்ட் லுக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இருக்கும் படமாக இப்படத்தை எடுக்க இருப்பதாக கூறும் ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இப்படம் அமைந்திருக்கும், என்றும் தெரிவித்துள்ளார்.

 

சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும்.

 

குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள், மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது பற்றியும், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்குமாம்.

 

Producer and Director Jagatheeshwara Reddy

 

சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் கூறியது தான் இப்படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம் பெறும், என்று கூறிய ஜெகதீஸ்வர ரெட்டி, இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்.