Jun 26, 2020 03:12 PM

ஒகே சொன்ன மத்திய அரசு! - தமிழக அரசு சம்மதிக்குமா?

ஒகே சொன்ன மத்திய அரசு! - தமிழக அரசு சம்மதிக்குமா?

கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், சினிமாத்துறையின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும், திரையரங்க துறை என்னவாகும் என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும், என்ற நிலையில் தான் இருக்கிறது.

 

இதற்கிடையே, ஒடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக தொடங்கியிருப்பதும் திரையரங்க துறைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் பாதிக்கப்பட்ட திரையரங்க தொழில் மீண்டும் பழைய நிலைக்கு வருவது கடினமான ஒன்றாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், சில தனி திரையரங்கள் மூடப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், இந்தியா முழுவதும் திரையரங்கங்கள் நடத்தி வரும் பி.வி.ஆர் குழுமம், சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் திரையரங்கங்களை திறக்க அனுமதி வழங்குங்கள். பிறகு படிபடியாக மற்ற இடங்களில் திறப்பது குறித்து முடிவு செய்யலாம், என்று கேட்டுக் கொண்டதாம்.

 

இதற்கு அமைச்சர் அமித்ஷா ஒக்கே சொல்லியிருப்பதாகவும், அதன்படி, வரும் ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், மத்திய அரசு திரையரங்கங்கள் திறக்க அனுமதி அளித்தாலும், இதில் முடிவு எடுக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடம் தான் விடும். அப்படி விட்டால், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது திரையரங்கங்கள் திறக்க அனுமதி வழங்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.