Aug 14, 2020 07:49 AM

”இன்று 150 வது நாள்”! - தொடரும் தமிழ் சினிமாவின் சோகம்

”இன்று 150 வது நாள்”! - தொடரும் தமிழ் சினிமாவின் சோகம்

ஒரு திரைப்படம் வெற்றிகரமாக ஓடும் போது, “100 வது நாள்”, “150 வது நாள்”, “200 வது நாள்” என்று போஸ்டர் ஒட்டி மகிழ்ந்த தமிழ் சினிமாத் துறையினர் தற்போது தங்களது வறுமை நாட்களை இப்படி போஸ்டர் மூலம் வெளிப்படுத்தும் அவல நிலை தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்டுள்ளது.

 

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டது போல சினிமாவும் பாதிக்கப்பட்டாலும், தற்போது பெரும்பாலான துறைகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், சினிமாத் துறையை இன்னும் கண்டுக்கொள்ளாதது, சினிமாத் துறையை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் கண்களில் கண்ணீருக்கு பதிலாக ரத்தத்தை வழிய செய்துவிட்டது.

 

திரையரங்கங்கள் மூடப்பட்டு இன்றுடன் 150 நாட்கள் ஆகிறது, என்று பிரபல தயாரிப்பாளர் தனசெழியன் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தான் தயாரித்த படத்தின் வெற்றி விழா போஸ்டரை வெளியிட வேண்டியவர், தற்போது சினிமாவின் மூடு விழா போஸ்டரை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்திருப்பதோடு, கட்டுப்பாடுகளுடன் பிற துறைகள் செயல்பட அனுமதி வழங்கியது போல, சினிமா துறைக்கும் அனுமதி வழங்க வேண்டும், என்று அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.

 

திரையரங்கங்கள் திறக்கவும், சினிமா படப்பிடிப்பு தொடங்கவும் அரசு அனுமதி வழங்க வேண்டும், என்று தமிழ் சினிமாத் துறையினர் பல முறை கோரிக்கை வைத்தும் தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. தற்போதைய சூழலில் சினிமா தியேட்டர்கள் திறக்கவும், படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கவும் முடியாது, என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

ஆனால், சினிமாத் துறையை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் மிக மோசமான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

 

கொரோனாவில் உயிரிழந்தாலும் பரவாயில்லை, பட்டினியால் உயிரிழப்பதை தடுக்கும் நடவடிக்கையாக கருதி, அரசு சினிமா தியேட்டர்களை திறக்கவும், சினிமா படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும், என்று சினிமா தொழிலாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும், அந்த ஒலி இன்னும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கு செல்லாதது கொரோனாவை விட கொடியது.

 

இன்று 150 வது நாளாக இருக்கும் சினிமாத் துறையின் சோகம், 200 நாட்ள் ஆவதற்குள் அரசு சினிமாத் துறையின் கோரிக்கைக்கு செவி சாய்த்தால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வழி கிடைக்கும்.