Dec 13, 2020 08:41 AM

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஷால்!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஷால்!

கமல்ஹாசன் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் ஜனவரி மாதம் அரசியல் கட்சி அறிவிக்கப்படும், என்று கூறியிருக்கிறார். ஆனால், இவர்களுக்கு முன்பே தமிழக அரசியலில் நேரடியாக இறங்கியவர் நடிகர் விஷால். ஆர்.கே. சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது மனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

 

இருப்பினும், தான் அரசியலுக்கு வந்தே தீருவேன், என்பதில் எப்போதும் உறுதியாக இருந்த நடிகர் விஷால், அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது குறித்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

 

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சங்கத்தின் கட்டிடத்தை கட்டும் பணியிலும் வெற்றி பெற்றார்.மேலும், தனது அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர், கொரோனா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் உணவு பொருட்கள் வழங்கி வந்தார்.

 

இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விஷால் முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

 

இதனால், விஷால் எதாவது அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிடுவாரா அல்லது தனியாக அரசியல் கட்சி தொடங்குவாரா, என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அவர் சுயேட்சையாக போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.