Jul 31, 2025 01:41 AM

’அக்யூஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

6cdc8ea2f88c44be6c008b4bd77b8660.png

Casting : Udhaya, Ajmal, Yogi Babu, Jhanvika Kalakeri, Shantika, Pawan, Daya Paneer Selvam, Sridhar, Prabhu Srinivas, Prabhu Solomon, Shankar Babu, Jayakumar, Deepa Baskar, Subhadra, Amma creation T Siva,

Directed By : Prabhu Srinivas

Music By : Naren Balakumar

Produced By : Jaeshan Studios, Sachin Cinemas, Sri Dayakaran Cini Production, Miy Studio - AL Udhaya, 'Daya' N.Panneerselvam, M.Thangavel

 

எம்.எல்.ஏ கொலை வழக்கு குற்றவாளியான நாயகன் உதயா, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்காக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் காவலர்கள் குழுவில் கான்ஸ்டபிள் அஜ்மல் இணைந்துக் கொள்கிறார். காவல்துறை வாகனத்தில் பயணிக்கும் போலீஸார், சில பிரச்சனைகளால் அரசு போக்குவரத்து பேருந்தில் செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே, கைதி உதயாவை கொலை செய்ய வேறு மாநில கும்பல் ஒன்று துரத்துவதோடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கொலை செய்வதற்கு திட்டம் போடுவதோடு, அதற்கு முட்டுக்கட்டையாக போலீஸ் கான்ஸ்டபிள் அஜ்மல் இருந்தால், அவரையும் கொலை செய்ய முடிவு செய்கிறார்.

 

கொலை வழக்கு குற்றவாளி உதயா யார்?, அவரது பின்னணி என்ன ?, உதயாவை கொலை செய்ய துரத்தும் கும்பல் யார் ?, அவரை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே எதற்காக கொலை செய்ய திட்டம் போடுகிறது ?, அவர்களிடம் இருந்து உதயாவை காப்பாற்றி காவலர் அஜ்மல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினாரா ? இல்லையா ? என்பதை கமர்ஷியலாக சொல்வதே ‘அக்யூஸ்ட்’.

 

ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், காதல், நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருக்கும் உதயா, கணக்கு என்ற தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, அளவாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று விடுகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களின் பட்டியலில் உதயா இடம் பிடிப்பது உறுதி.

 

போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அஜ்மல், சாதாரண காவலராக எண்ட்ரி கொடுத்தாலும், காவல்துறையின் பலம் மற்றும் அவர்களது துப்பாக்கியின் வீரியம் போல், மிடுக்காகவும், துடுக்காகவும் நடித்திருக்கிறார். அவ்வபோது தனது வருங்கால மனைவியுடன் போனில் பயந்தும், பாசமாகவும் பேசும் காட்சிகளும் சிறப்பு.

 

நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, எளிமையாக இருந்தாலும், நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார். அஜ்மலின் ஜோடியாக செல்போனில் காதல் செய்யும் மற்றொரு நாயகி சாண்டிகாவின் நடிப்பிலும் குறையில்லை.

 

யோகி பாபுவின் கதாபாத்திரம் சிரிக்க வைப்பதோடு, திரைக்கதையோடு ஒன்றி பயணித்து படத்திற்கு பலம் சேர்க்கவும் செய்திருக்கிறது. 

 

Accused Movie Review

 

எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் பவன், அவரது மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, எம்.எல்.ஏ-வின் தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதியாக நடித்திருக்கும் டி.சிவா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ, சண்டைக்காட்சிகளையும், சேசிங் காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

நரேன் பாலகுமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவின் வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் என்றாலும் அதை தனது படத்தொகுப்பு மூலம் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீனிவாஸ், கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையை பல திருப்பங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் செல்லும் இயக்குநர் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருப்பது படத்தை தொய்வடைய செய்து விடுகிறார்.

 

எம்.எல்.ஏவின் கொலைக்கான பின்னணியும், அதில் தொடர்புடைய நாயகனின் பின்னணியும் அதர பழசாக இருப்பதோடு, படத்தின் காட்சிகளும் ஏதோ பழைய படத்தை பார்க்கும் உணர்வையே கொடுத்தாலும், உதயாவின் நடிப்பும், உழைப்பும் அந்த உணர்வை மறக்கடித்து படத்தை சற்று ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘அக்யூஸ்ட்’ குறை இருந்தாலும், பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.7/5