Apr 07, 2023 09:41 AM

’ஆகஸ்ட் 16 1947’ திரைப்பட விமர்சனம்

333074060f96554c011f2b9a6ef2af12.jpg

Casting : Goutham Karthik, Revathi, Pugazh, Richard Ashton,Jeson Sha, Madhusuthan Rao

Directed By : PonKumar

Music By : Shan Roldan

Produced By : AR Murugadass

 

செங்காடு எனும் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், அந்த கிராமத்து மக்களை கொத்தடிமைகள் போல் நடத்தி அவர்களின் உழைப்பை சுரண்டுவதோடு அம்மக்களை பயத்தோடு வைத்திருக்க நினைக்கிறார் ஆங்கிலேயர். அவருடைய மகன் அந்த கிராமத்தில் இருக்கும் இளம் பெண்களை கற்பழிப்பதையே வேலையாக வைத்திருக்கிறார். 

 

இவர்களிடம் சிறைபட்டு சித்ரவதை அனுபவித்து வரும் செங்காடு மக்கள் நாட்டின் விடுதலையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதற்கிடையே, ஆங்கிலேயரின் மகனை நாயகன் கெளதம் கார்த்திக் கொலை செய்துவிடுகிறார். மகனின் கொலைக்கு பழி தீர்க்க நினைக்கும் ஆங்கிலேயர் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததை மறைத்து, செங்காடு மக்களை ஒட்டு மொத்தமாக அழிக்க முடிவு செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் மீதிக்கதை.

 

நாயகன் கெளதம் கார்த்திக் களத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டிருப்பதோடு, கடுமையாக உழைத்திருக்கிறார். தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் அக்காலக்கட்டத்தை வெளிக்காட்டி கவனம் பெறுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேவதி கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. அமைதியான நடிப்பு, அழகான முகம் என்று ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

 

கொடூர ஆங்கிலேயராக நடித்திருக்கும் வெளிநாட்டு நடிகர் ரிச்சர்ட் அஷ்டோன் மற்றும் அவரது மகனாக நடித்திருக்கும் ஜேசன் ஷா ஆகியோரது கதாபாத்திரமும், நடிப்பும் செங்காடு மக்களை மட்டும் இன்றி படம் பார்ப்பவர்களையும் அலற வைக்கிறது.

 

முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் புகழ், காமெடியை தாண்டிய நடிப்பில் கவனம் பெறுகிறார். 

 

ஜமீனாக நடித்திருக்கும் மதுசூதன ராவ் மற்றும் அவருடைய மகன்கள், செங்காடு மக்களாக நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரும் கதைக்களத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவு அக்காலக்கட்டத்தை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கலை இயக்குநர் டி.சந்தானத்தின் பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை கதைக்கு ஏற்ற்படி இருப்பதோடு, கதைக்களத்திற்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது.

 

தொழிலாளிகளை சுரண்டும் முதலாலித்துவம் தற்போதைய காலக்கட்டத்திலும் நிகழ்ந்துக்கொண்டிருக்க, எந்தவித சட்டமும், பாதுகாப்பும் இல்லாத ஆங்கிலேயர் ஆட்சியில் அது எப்படி இருந்திருக்கும், என்ற கற்பனையை இயக்குநர் பொன்குமார் கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

1947ம் காலகட்டம் மற்றும் செங்காடு கிராமம், கிராம மக்கள் என அனைத்தும் படத்தை ரசிக்க வைக்கும்படி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

கதைக்களம், காட்சி  வடிவமைப்பு மற்றும் நட்சத்திரங்களிடம் வேலை வாங்கிய விதம் ஆகியவற்றை நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் பொன்குமார், திரைக்கதையை சற்று வேகமாக நகர்த்தியிருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

 

ரேட்டிங் 3/5