Dec 21, 2025 04:18 AM

’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்பட விமர்சனம்

1388fadbf950c27beb089706356cf6d9.jpg

Casting : Sam Worthington, Zoe Saldaña, Sigourney Weaver, Stephen Lang, Kate Winslet

Directed By : James Cameron

Music By : Simon Franglen

Produced By : Lightstorm Entertainment - James Cameron, Jon Landau

 

காடு மற்றும் கடலை மையமாக கொண்டு உருவான அவதார் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாவது பாகமான ‘அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ நெருப்பு மற்றும் சாம்பலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஆராய்ச்சிக்காக நவி இன மனிதனாக மாறிய நாயகன் சாம் வொர்திங்டன் (Sam Worthington), அம்மனிதர்களில் ஒருவனாக மாறி பண்டோரா உலகத்தை காப்பாற்றுவதாக முதல் பாகம் முடிவடையும். 

 

மனைவி ஜோ சல்டானா (Zoe Saldana) மற்றும் குழந்தைகளுடன் வாழும் சாம் வொர்திங்டனை அழித்து பண்டோராவை கைப்பற்ற வில்லன் ஸ்டீபன் லாங் (Stephen Lang) நவி இன மனிதனாக உருவெடுத்து, அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடன் வர, அவரை எதிர்த்து போரிட்டு பண்டோராவை நாயகன் காப்பாற்றுவதாக இரண்டாம் பாகம் முடிவடையும்.

 

தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாம் பாகத்தில், நாயகன் வொர்திங்டனுடன் வாழும் தனது மகன் ஸ்பைடரை அழைத்துச் செல்வதோடு, அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் பண்டோரா மீது வில்லன் ஸ்டீபன் லாங் நவி இன மனிதராக படையெடுத்து வருகிறார். இந்த முறை அதிநவீன ஆயுதங்களுடன், பண்டோராவில் வாழும் மற்றொரு நவி இன மனிதர்களான சாம்பல் பகுதி மனிதர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு போரிடும் வில்லன் ஸ்டீபன் லாங் நினைத்தது நடந்ததா ? இல்லையா ? என்பதை வழக்கம் போல் காட்சி விருந்து படைத்திருப்பதே ‘அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’.

 

ஹாலிவுட் படங்கள் என்றாலே பிரமாண்டமாத்திற்கு பஞ்சம் இருக்காது, அதிலும் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் பிரமிக்க வைக்கும்படி இருப்பது அதன் கூடுதல் சிறப்பாக இருக்கும். ஆனால், 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ இதுவரை நாம் பார்த்த பிரமாண்டங்களை மிஞ்சும் அளவுக்கு, பிரமாண்டத்தையே வியக்க வைக்கும் அளவுக்கு பண்டாரா என்ற கற்பனை உலகத்திற்கு கிராபிக்ஸ் மூலம் உயிர் கொடுத்து, திரையில் மாபெரும் பிரமாண்ட மாயாலாஜத்தை நிகழ்த்தியது. அப்படத்தை தொடர்ந்து வெளியாகும் அடுத்தடுத்த பாகங்கள் உலகளவில் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாகி விட்டது.

 

அந்த வகையில், மூன்றாம் பாகமான ’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ மிகப்பெரிய காட்சி விருந்தாக பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. குறிப்பாக, காடு, கடல் ஆகியவற்றை தொடர்ந்து நெருப்பு மற்றும் சாம்பலை மையப்படுத்திய நிறங்களும் அதைச் சார்ந்த காட்சிகளும் பண்டாரா உலகில் உள்ள புதிய உலகத்தை ஆச்சரியத்தோடு பார்க்க வைக்கிறது.

 

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் (James Cameron) கற்பனை அசாதரணமானது என்றால், அதை காட்சி மொழியில் அவர் சொல்லும் விதம் அதிசயமானதாக இருக்கும். அப்படி தான் இந்த படத்திலும் காட்சிகள் அனைத்தும் மிரட்டுகிறது. அதிலும், 3டி-யில், பெரிய திரையில் அந்த காட்சிகளை பார்க்கும் போது, புதிய சினிமா அனுபவம் கிடைக்கிறது.

 

3 மணி நேரத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் மட்டுமே பார்வையாளர்களை திருப்திப்படுத்திவிடும் என்பது சாத்தியம் இல்லை, என்பதை திரைக்கதையின் பலவீனம் நிரூபித்துள்ளது. குறிப்பாக, யுத்த காட்சிகளில், யார் யாரை தாக்குகிறார்கள் என்ற தெளிவே இல்லாதது மற்றும் பண்டோராவை தாக்க வரும் வில்லனின் அதிநவீன ஆயுத படைகளும், அதை முன்னோர்களின் சக்தியுடன் எதிர்க்கும் நவி மனிதர்களின் எதிர் தாக்குதலும், ஒரே மாதிரியாக இருப்பதால், ஆச்சரியப்பட வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை தாண்டி சலிப்பை ஏற்படுத்துகிறது. 

 

முதல் இரண்டு பாகங்களில் நாயகன், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பட்டதை போல் இந்த பாகத்தில் அவர்களுடன் சேர்த்து, அவ்ர்களின் பிள்ளைகளுக்கும் மற்ற சில கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தின் நீளம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், அது தேவை இல்லாததாகவே தெரிகிறது.

 

சைமன் ஃப்ராங்க்லனின் (Simon Franglen) பின்னணி இசை கிராபிக்ஸ் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது. 

 

ரஸ்ஸல் கார்பெண்டரின் (Russell Carpenter) ஒளிப்பதிவில் நெருப்பு மற்றும் சாம்பல் நிறங்களை வெளிக்காட்டும் வண்ணங்கள், இதுவரை பார்த்த அவதார் பாகங்களில் இருந்து முற்றிலும் காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. 

 

ஒரு படத்தில் ஐந்து பேர் பாடல்கள் எழுதுவது தான் நம்ம ஊர் வழக்கம், ஆனால் இதில், ஸ்டீபன் ஈ. ரிவ்கின் (Stephen E. Rivkin), நிக்கோலஸ் டி டோத் (Nicolas de Toth), ஜான் ரெஃபோவா (John Refoua), ஜேசன் காடியோ (Jason Gaudio), ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) என ஐந்து பேர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். இவர்களது பணி தான் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தாலும், படத்தின் நீளத்தை அதிகமாக வைத்து படத்தை சற்று பலவீனமாக்கியும் இருக்கிறார்கள்.

 

பண் டோரா என்ற கற்பனை உலகத்தை பஞ்ச பூதங்களை மையப்படுத்தி காட்சிப்படுத்தி வரும் ஜேம்ஸ் கேமரூன், இந்த முறை வட இந்தியாவின் அகோரிகள் போல் புதிய நவி இன மக்களையும், அதன் தலைவியையும் அறிமுகப்படுத்தியிருப்பதோடு, வழக்கம் போல் தனது கற்பனை உலகத்திற்கு, விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உயிர் கொடுத்து பார்வையாளர்கள் வியக்கும்படி திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

 

வழக்கமான கதை சொல்லல் முறை என்றாலும், திரை மொழியில் பார்வையாளர்களை ஒவ்வொரு பாகத்திலும் வியக்க வைத்து புதிய சினிமா அனுபவத்தை கொடுக்கும் ‘அவதார்’ தொழில்நுட்ப குழுவினர், இந்த முறையும் அதை பார்வையாளர்கள் முழுமையாக திருப்தியடையும் வகையில் செய்திருந்தாலும்,  இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட கதை மற்றும் திரைக்கதை குழுவினர், தங்கள் எழுத்துகள் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் அதை செய்ய தவறியிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், ’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ பிரமாண்டம் மட்டுமே.

 

ரேட்டிங் 3.5/5