Jan 12, 2024 07:17 PM

’அயலான்’ திரைப்பட விமர்சனம்

b990bd8b6fa07321f8d1162b7774b762.jpg

Casting : Sivakarthikeyan, Rakul Preet Singh, Sharad Kelkar, Isha Koppikar, Yogi Babu, Karunakaran, Kothandam, Banupriya

Directed By : R.Ravikumar

Music By : AR Rahman

Produced By : Kotapadi J. Rajesh

விண்ணில் இருந்து விழும் எரிக்கல்லின் சிறு பகுதி ஒன்று பூமியில் விழுகிறது. அந்த எரிக்கல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் அது மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிய வருகிறது. அந்த கல் மூலமாக பூமியை இதுவரை யாரும் தோண்டாத ஆழத்தில் தோண்டி பூமிக்கு அடியில் உள்ள மிக கொடிய விசவாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் ஈடுபடுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டு மொத்த பூமியே அழிந்துவிடும் என்பதை அறிந்துக்கொள்ளும் வேற்றுகிரகவாசிகள் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற முடிவு செய்கிறார்கள். அதற்காக வில்லனிடம் இருக்கும் அந்த எரிக்கல்லை கைப்பற்ற வேற்றுகிரகவாசி ஒருவர் பூமிக்கு வருகிறார்.

சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எரிக்கல்லை எடுக்க வரும் வேற்றுகிரகவாசி, சிவகார்த்திகேயனுடன் நட்பாவதோடு, தனது  முயற்சியில் அவரையும் சேர்த்துகொள்ள, இருவரும் சேர்ந்து பூமியை அழிவில் இருந்து மீட்டார்களா?, இல்லையா?, வேற்றுகிரவாசிகள் பூமியை காப்பாற்ற நினைப்பது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

சிவகார்த்திகேயன் வழக்கம் கதாநாயகியை கண்டதும் காதல் கொள்கிறார். உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பை காமெடியாக செய்து சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் சோகமாக நடிப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டவும் முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில், வேற்றுகிரகவாசி படம் என்றாலும் சிவகார்த்திகேயன் வழக்கமான கமர்ஷியல் நாயகனாகவே வலம் வருகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். சில காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்.

 

யோகி பாபு, கருணாகரன் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பால சரவணனும் தனது பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் சரத் கேல்கர் மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை இஷா கோபிகர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

வேற்றுகிரகவாசிக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் வேற்றுகிரகவாசியாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவனின் பணி சிறப்பு.

 

முனிஷ்காந்த், கோதண்டம், செம்மலர் அன்னம், பானுப்ரியா ஆகியோர் வந்து போகிறார்கள். 

 

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பது போல், ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. 

 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.

 

அறிவியல் பூர்வமான கதையை கமர்ஷியல் ஃபார்முலாவோடு இயக்கியிருக்கும் ஆர்.ரவிகுமார், அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக மட்டும் இன்றி புரியும் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். 

 

மனிதர்களை போல் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டும், அவைகளுக்கும் இந்த பூமி சொந்தம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார்.

 

கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் வேற்றுகிரகவாசி மிக சிறப்பாக உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சி மற்றும் அதன் செயல்பாடு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பதோடு, அதற்காக படக்குழு கடுமையாக உழைத்திருப்பதும் திரையில் தெரிகிறது.

 

தொழில்நுட்ப ரீதியாக படத்தை தரமாக கொடுத்திருப்பதோடு, அறிவியல் தொடர்பான கதையை எளிமையான முறையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வில்லனிடம் மோதும் காட்சிகள் இழுவையாக இருக்கிறது. குறிப்பாக பல இடங்களில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது போல் தோன்றுவதோடு, சிறுவர்களை ஈர்ப்பதற்காக சில காட்சிகள் திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. இந்த குறைகளை  தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘அயலான்’ அனைவருக்குமான நல்ல பொழுதுபோக்கு படம் என்பதை மறுக்க முடியாது.

 

ரேட்டிங் 2.9/5