Jul 29, 2022 06:22 AM

’பேட்டரி’ விமர்சனம்

fc0b1b45596724adfc884fbff529ba4c.jpg

Casting : Sengutuvan, Ammu Abirami, MS Baskar, Deepak Shetty, Yogi Japee, Abishek, Nagendra Prasad

Directed By : Manibharathi

Music By : Siddharth Vibin

Produced By : C Madhayian

 

சப் இன்ஸ்பெக்டராக புதிதாக வேலைக்கு சேருகிறார் ஹீரோ செங்குட்டுவன். அவர் சேர்ந்த முதல் நாளே சென்னையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பற்றி விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போதே போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட, அவரை தொடர்ந்து மேலும் ஒரு கொலை என கொலை சம்பவங்கள் தொடர்கிறது. இந்த கொலைகளை யார் செய்வது? எதற்காக செய்கிறார்கள்? என்பதை விவரிப்பது தான் படத்தின் கதை.

 

ஹீரோ செங்குட்டுவன் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, அளவான நடிப்பு மூலம் கவர்கிறார். புதுமுகமாக இருந்தாலும் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

 

குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் கதையுடன் பயணிப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும், படத்துடன் ஒட்டாமலே நகர்கிறது.

 

போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கும் யோக் ஜேபி, தீபக் ஷெட்டி ஆகியோர் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரத்தை தோற்றத்திலும், நடிப்பிலும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

அபிஷேக், நாகேந்திர பிரசாத்,  எம்.எஸ்.பாஸ்கர், சிறுமி மோனிகா என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக பயணித்துள்ளது.

 

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர் மணிபாரதி,  பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் ஈர்த்துவிடும் இயக்குநர் மணிபாரதி, அடுத்தடுத்த காட்சிகள் மூலம் சீட் நுணியில் உட்கார வைத்து, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்க வைத்தாலும், அந்த எதிர்ப்பார்ப்பு படம் தொடங்கி 10 அல்லது 15 நிமிடங்களுக்குப் பிறகு நீடிக்காமல் போவது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

 

ஒரே சம்பவத்தை சுற்றி சில கிளைக்கதைகள் இருந்தாலும் அதை சொல்லிய விதத்தில் இயக்குநர் மணிபாரதி சில சொதப்பல்களை செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகள் படத்துடன் ஒட்டாமலேயே பயணிக்கிறது.

 

இந்த சிறு சொதப்பல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்த படம் நிச்சயம் அனவைருக்கும் பிடிக்கும் சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருக்கும்.

 

மொத்தத்தில், ‘பேட்டரி’ கொஞ்சம் வீக் தான்.

 

ரேட்டிங் 3/5