Jul 08, 2022 05:15 AM

’பெஸ்டி’ விமர்சனம்

457facc46ce8422b78924675753bdac0.jpg

Casting : Ashok, Yashika Anand, Maran, Seshu, Ambani Shankar, jeeva

Directed By : Ranga

Music By : JV

Produced By : Dr.R.Sarathiraja

 

டேடிங் செல்லும் அசோக், யாஷிகா ஆனந்த் ஜோடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்குகிறார்கள். இருவரும் நெருக்கமாகும் போதெல்லாம் யாராவது வந்து அவர்களை தொந்தரவு செய்வதோடு, யாஷிகா ஆனந்தை அமானுஷ்ய சக்தி ஒன்று அச்சுறுத்தவும் செய்கிறது.  யாஷிகாவுக்கு நடந்ததை நம்பாத அசோக், கெஸ்ட் ஹவுஸுக்கே நாம் போகவில்லை என்று சொல்கிறார். மீண்டும் இருவரும் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு போகிறார்கள். அப்போது யாஷிகாவுக்கு ஏற்கனவே நடந்த சம்பவங்கள், பார்த்த மனிதர்கள் மீண்டும் நடக்கிறது. திடீரென்று யாஷிகாவுக்கு நடந்தது போன்ற அமானுஷ்ய அச்சுறுத்தல் அசோக்கிற்கு நடக்கிறது. அதுபற்றி அசோக் யாஷிகாவிடம் சொல்லும் போது அவர் அதை நம்ப மறுப்பதோடு, கெஸ்ட் ஹவுஸ்க்கே நாம் போகவில்லை, என்று கூறி மீண்டும் அதே கெஸ்ட் ஹவுஸுக்கு இருவரும் போகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது? இருவரின் மனநிலைக்குமான காரணம் என்ன? என்பதை திகிலாக சொல்லியிருப்பது தான் ‘பெஸ்டி’

 

யாஷிகா ஆனந்த் மற்றும் அசோக் இருவரும் முழுப்படத்தையும் தோளில் வைத்து சுமந்திருப்பதால், இருவருக்கும் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அசோக் தன்னிடம் உள்ள மொத்த வித்தையையும் இறக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரொம்ப கஷ்ட்டப்பட்டு நடித்திருப்பது பாராட்டக்கூடியதாக இருந்தாலும், அவருடைய ஓவர் ஆக்டிங் சில சமயங்களில் படம் பார்ப்பவர்களை கஷ்ட்டப்படுத்துவதை மறுக்க முடியாது.

 

யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை தாராளமாக காட்டாதது சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவர் நடிக்க முயற்சித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. 

 

அவ்வபோது வந்து போகும் மற்ற கதாப்பாத்திரங்களான மாறன், ஷேஷு, அம்பானி சங்கர், ஜீவா, வாசு விக்ரம், சத்யன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் ஜூனியர் ஆர்டிஸ்ட் அளவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

முழு கதையும் ஒரே ஒரு லொக்கேஷனில் நடந்தாலும் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆனந்த், தனது பிரேம்கள் மூலம் வித்தியாசமாக காட்டியிருப்பதோடு, திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சிகளையும் வித்தியாசமாக காட்ட முயற்சித்திருக்கிறார்.

 

திகில் படத்திற்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் ஜே.வி, பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

 

யாஷிகா ஆனந்துக்கு திகில் சம்பவங்கள் நடக்கும் போது அசோக் பயமே இல்லாமல் இருப்பது, அதே சம்பவங்கள் அசோக்கிற்கு நடக்கும் போது யாஷிகா ஆனந்த் பயமே இல்லாமல் இருப்பது, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவதோடு, ரசிகர்களை கதைக்குள் இழுத்துவிடுகிறது.

 

திகில் சம்பவங்கள் மூலம் திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், ஒரே காட்சிகள் திரும்ப திரும்ப வருவது சற்று சலிப்படையவும் செய்கிறது. பிறகு கெஸ்ட் ஹவுஸில் நடக்கும் சம்பவங்களுக்கான காரணம் பற்றி இயக்குநர் விவரிக்கும் போது மீண்டும் வேகம் எடுக்கும் படம், இறுதியில் சோசியல் மெசஜோடு நல்ல திகில் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

 

படத்தின் ஆரம்பத்தில் ரசிகரக்ளிடம் ஏற்படும் எதிர்ப்பார்ப்பு அடுத்த அடுத்த காட்சிகளிலும் தொடர்வது போல் திரைக்கதை அமைத்து, காட்சிகளிலும் சற்று வித்தியாசத்தை காட்டியிருந்தால் இதை விட பெஸ்ட்டான படமாக இருந்திருக்கும்.

 

மொத்தத்தில், ‘பெஸ்டி’ பெஸ்ட்டுக்கும், வேஸ்ட்டுக்கும் இடையிலான சுமாரான படம். தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5