Jul 20, 2025 03:19 AM

’சென்ட்ரல்’ திரைப்பட விமர்சனம்

d836ca0181ee2e4e373d0923cb7b5a5a.jpg

Casting : Vignesh, Soneshwari, Perarasu, Siddha Darsha, Aaru Bala, Director Bharathi Sivalingam

Directed By : Bharathi Sivalingam

Music By : Ela

Produced By : Sri Ranganathar Movie Makers - Viyapiyan Devaraj, Satha Kumaraguru, Thamizh Sivalingam

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு செல்கிறார். நன்றாக படிக்க கூடிய விக்னேஷ், தன்னை போல் கஷ்ட்டப்படாமல் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று அவரது தந்தை விரும்புகிறார். ஆனால்,  கூலி வேலை செய்யும் தனது தந்தையின் பாராத்தை ஓரளவு குறைக்க, இந்த இரண்டு மாதங்கள் வேலை செய்ய வேண்டும், என்பதில் உறுதியாக இருக்கும் விக்னேஷ் சென்னையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலைக்கு சேருகிறார்.

 

தங்குவதற்கு இடம், உணவு, சரியான நேரத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனமாக இருந்தாலும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் அந்த நிறுவனத்தின் முதலாளி பேரரசு, சிறிய தவறு செய்தாலும் தொழிலாளர்களை அடிப்பது, எதிர்த்து நின்றால் கொலை செய்வது என்ற கொடூர முகத்தோடு வலம் வருகிறார். படித்து பெரிய ஆளாக வர வேண்டிய விக்னேஷ், குடும்ப வறுமைக்காக இப்படி ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ள, அங்கிருந்து தப்பித்தாரா?, தனது தந்தை ஆசைப்பட்டது போல் படித்து நல்ல பணியில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அப்பாவியான முகம், அளவான நடிப்பு என கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். குடும்ப வறுமை, கூலி வேலை செய்யும் அப்பாவின் பரிதாப நிலை ஆகியவற்றை நினைத்து கவலைக்கொள்ளும் அவர், காதலை கூட கவலையோடு அணுகும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் சோனேஷ்வரி, அதிகம் பேசவில்லை என்றாலும், விக்னேஷ் மீதான அவரது காதல் மற்றும் பிரிவின் வருத்தத்தை கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

வில்லனாக வைகுண்டம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு, நடிப்பில் மிரட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது உருவத்திற்கு அது எடுபடவில்லை. நடிப்பில் வில்லனாக மிளிரவில்லை என்றாலும், பஞ்ச் வசனங்களில் சற்று மிளிர்கிறார்.

 

நூற்பாலையின் மேற்பார்வையாளராக செங்கோடன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’சித்தா’ தர்ஷன் செயற்கையாகவும், அதிகமாகவும் நடிப்பதை தவிர்த்திருக்கலாம்.

 

நூற்பாலை ஊழியர்களாக நடித்திருக்கும் ஆறு பாலா, வட மாநில ஊழியராக நடித்திருக்கும் இயக்குநர் பாரதி சிவலிங்கம் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி, கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் உணர்வுகளையும் எந்தவித அரிதாரமும் இன்றி பார்வையாளர்கள் மனதில் கடத்தியிருக்கிறார். 

 

இசையமைப்பாளர் இலாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையை பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

 

படத்தொகுப்பாளர் விது ஜீவா திரைக்கதையில் சில தேவையில்லாத விசயங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றை சுருக்கமாக சொல்லி படத்தை வேகமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் பாரதி சிவலிங்கம், வறுமையின் காரணமாக சிறுவர்கள் பலர் தங்களது வாழ்க்கையை தொலைத்துவிட்டு கொத்தடிமைகளாக வாழும் வலி மிகுந்த வாழ்க்கையை திரையில் காட்ட முயற்சித்திருக்கிறார். 

 

வறுமையின் கொடுமை தற்போதும் ஏதோ ஒரு மூளையில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என்றாலும், நாயகனின் தந்தை ஒருவேளை உணவு தான் சாப்பிடுகிறார் உள்ளிட்ட சில விசயங்கள் செயற்கைத்தனமாக இருக்கிறது. இருந்தாலும், தற்போதும் வறுமையை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை சோகமாக சொன்னாலும் சற்று சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாரதி சிவலிங்கம்.

 

மொத்தத்தில், ’சென்ட்ரல்’ சோகமான பயணமாக இருந்தாலும் முடிவு தன்னம்பிக்கையை கொடுக்கிறது.

 

ரேட்டிங் 2.8/5