Feb 02, 2024 02:10 AM

’சிக்லெட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

583c5cc88e9293a6dfbf7e32d5c24cdf.jpg

Casting : Sathvik Verma, Nayan Karishma, Surekha Vani, Sriman, Jack Robinson, Amrita Halder, Manjeera, Rajagopal

Directed By : Muthu

Music By : Balamurali Balu

Produced By : Srinivasan Guru.A

 

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு கனவு. அதே  சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன்படி, மூன்று பேரும் தங்களது மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருப்பதற்காக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு செல்கிறார்கள். பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, தங்களது பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில், பிள்ளைகளின் ஆசை நிறைவேறியதா? அல்லது பெற்றோர்களின் கனவு பலித்ததா? என்பதை இரு தரப்பினருக்குமான அறிவுரையாக சொல்வதே ‘சிக்லெட்ஸ்’.

 

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் மூன்று பேர் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என படம் முழுவதும் காம நெடியை தூவியிருக்கிறார்கள். 

 

மூன்று பெண்களை காதலிக்கும் இளைஞர்களாக நடித்திருக்கும் மூன்று இளைஞர்களின் கதாபாத்திரமும், நடிப்பும் தற்போதைய இளசுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. வருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாத்விக் வர்மா, சிக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளைஞர் என மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

மூன்று பெண்களின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்க வைக்கவும் செய்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் கேமரா பெரும்பாலும் பெண்களின் உடலை சுற்றியே வலம் வருவதோடு, ரசிகர்கள் பெருமூச்சு விட வைக்கும் விதத்தில் அவர்களுடைய அங்கங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருந்தாலும் அங்கேயும் கவர்ச்சிக்கு தான் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியும், வார்த்தைகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை அளவு.

 

காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் முத்து, வயதுக்கு ஏற்ற தடுமாற்றத்தில் சிக்கும் இளைஞர்கள் தங்களது அனுபவம் மூலமாகவே அதில் இருந்து விடுபடுவார்கள், எனவே பெற்றோர்கள் தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் போக்கில் வாழ விட வேண்டும், என்று பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்லியிருக்கிறார்.

 

அறிவுரை சொல்வதால் இந்த படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கலாம், என்று நினைக்க வேண்டாம். அறிவுரை என்ற பெயரில் விசயம் தெரியாதவர்களுக்கு கூட, இப்படிப்பட்ட சந்தோஷங்களை, இந்த வயதில் அனுபவிக்க வேண்டும், என்ற தவறான பாதையை காட்டும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் இருக்கின்றன.

 

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பலான விசயங்கள் பற்றி, வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லிவிட்டு, இறுதியில் இதெல்லாம் தப்பு, என்று சொல்லும் வழக்கமான பாணியில் பயணிப்பதோடு, படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளையும், அருவருப்பான வசனங்களையும் வைத்து இளைஞர்களை ஈர்க்க நினைத்திருக்கிறார் இயக்குநர் முத்து.

 

கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிப்பதற்கான தனி ரசிகர் வட்டம் இருந்தாலும், அதை ரசிக்கும்படி சொல்லாமல் முகம் சுழிக்கும் வகையில் சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம். அதிலும், பெண் பிள்ளைகள் என்றாலே இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டும், என்ற கருத்தை திணித்து பெண்களை அவமரியாதை செய்திருப்பது பெரும் சோகம்.

 

மொத்தத்தில், அட்வைஸ் என்ற பெயரில் அலங்கோலமான விசயங்களை சொல்லி இளைஞர்களை சீரழிக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறது இந்த ‘சிக்லெட்ஸ்’.

 

ரேட்டிங் 2/5