’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்பட விமர்சனம்

Casting : Santhanam, Geethika Tiwary, Selvaraghavan, Gautham Vasudev Menon, Nizhalgal Ravi, Kasthuri, Yashika Anand
Directed By : S Prem Anand
Music By : ofRO
Produced By : The Show People, Niharika Entertainment - Arya
யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது. அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் அந்த திரையரங்கத்திற்கு செல்ல, அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள்.
சைக்கோ கிரைம் திரில்லர் மற்றும் திகில் ஜானர் திரைப்படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து கொள்ளும் சந்தானம், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார், என்பதை வழக்கமான பாணியிலும், சற்று குழப்பாமான பாணியிலும் சொல்வதே ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’.
உருவம், உடை, பேச்சு ஆகியவற்றில் மாற்றத்தை காட்டியிருக்கும் சந்தானம் நடிப்பில் எந்தவித மாற்றத்தையும் காட்டவில்லை. தனது வழக்கமான அணியினர் உடன், வழக்கமான காமெடிகளை கொண்டு படத்தை தாங்கி பிடித்திருக்கும் சந்தானம், உடன் நடித்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்வையாளர்களை சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக மட்டும் இன்றி பேயாகவும் நடித்திருக்கும் கீதிகா திவாரியின் வேடம் பெயர் அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் என புதிய காமெடி கூட்டணி மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது முயற்சியில் முழுவதுமாக வெற்றி பெறவில்லை.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருந்தாலும், ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி காட்சிகளை வண்ணமயமாகவும், கமர்ஷியலாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், குழப்பமான திரைக்கதையை மக்களுக்கு எளிமையாக புரியும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், காமெடி கதையாக இருந்தாலும், திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ஹீரோ, என்ற பாணியில் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
சப் டைடில், நான் கடவுள் ராஜேந்திரனின் சில காட்சிகள், வீண் பேச்சு பாபு கதாபாத்திர காட்சிகள் ஆகியவை சிரிக்க வைத்தாலும், கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் போன்றவர்களின் கதாபாத்திரம் படத்துடன் ஒட்டாமல் பயணித்து பார்வையாளர்களையும் படத்துடன் ஒட்டவிடாமல் செய்கிறது.
முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் திகில் நகைச்சுவை என்ற பெயரில் கடுப்பேற்றுவதோடு, இழுவையாக இழுத்து இம்சைப்படுத்துகிறார்.
படம் முழுவதும் திரை விமர்சகர்களை கேள்வி கேட்டு, கலாய்த்திருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், இறுதியில் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் நல்ல படம் ஓடும், என்று பதில் அளித்திருக்கிறார். அந்த பதில் அவருக்கும் பொருந்தும்.
மொத்தத்தில், ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ தலைப்பில் இருக்கும் இரட்டிப்பு காமெடி காட்சிகளில் இல்லை.
ரேட்டிங் 2.5/5