Oct 09, 2021 06:56 PM

’டாக்டர்’ விமர்சனம்

e926f5eebda18b6bdc35919185ffdecb.jpg

Casting : Sivakarthikeyan, Priyanka Mohan, Archana, Yogi Babu, Vinay, Arun Alexander

Directed By : Nelson

Music By : Aniruth

Produced By : KJR and SK Productions

 

காணாமல் போகும் சிறுமியை தேடிச் செல்லும் ஹீரோவுக்கு, சிறுமிகளை கடத்தி வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் கூட்டத்தைப் பற்றி தெரிய வருகிறது. உடனே, அந்த கூட்டத்தால் கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் பணியில் இறங்கும் ஹீரோ, அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘டாக்டர்’ படத்தின் கதை.

 

ஏற்கனவே நாம் பல படங்களில் பார்த்திருக்கும் பெண் கடத்தல், தான் கதைக்கரு என்றாலும், அதற்கு இயக்குநர் நெல்சன் அமைத்த திரைக்கதையும், காட்சிகளும், மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதோடு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படமாகவும் உள்ளது.

 

சிவகார்த்திகேயன், நடிக்காமலே நடிப்பில் அசத்தியிருக்கிறார். சூரி அல்லது சதீஷ் என இரண்டில் ஒருவரை வைத்துக்கொண்டு ஓவராக பேசிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனா இது! என்று நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் சிவகார்த்திகேயன், குறைவாக பேசியிருந்தாலும், பல இடங்களில் நம்மை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார்.

 

அழகான நாயகியை அறிவில்லாதவராக காட்டும் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தாலும், முதல் படத்திலேயே தனக்கு காமெடியும் வரும் என்பதை நிரூபித்திருப்பவர், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் வினய் ஆரவாரம் இல்லாத கதாப்பாத்திரத்தில், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

காமெடி என்ற பெயரில் பல படங்களில் நம்மை கடுப்பேற்றி வந்த யோகி பாபு, நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை தனது கவுண்டர்கள் மூலம் குஷிப்படுத்தியிருக்கிறார். அவருடன் கூட்டணி அமைத்திருக்கும் டோனி வரும் காட்சிகள் அத்தனையும் திரையரங்கையே அதிர செய்கிறது.

 

அர்ச்சணா, அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருப்பதோடு, கவனமும் பெறுகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மா, அப்பாவாக நடித்திருக்கும் நடிகர், நடிகை ஒரு சில காட்சிகளில் வந்தாலும், நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்கள். 

 

அனிருத்தின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. “டிக் டாக் எல்லாம் வேண்டாம்...” பாடல் ஏற்கனவே ஹிட்டாகியிருந்தாலும், அதை படமாக்கிய விதமும், அதற்கு சிவகார்த்திகேயனும், பிரியங்காவும் போட்டிருக்கும் ஆட்டம், நம்மையும் ஆட வைக்கிறது. பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடும் பாடலாக இருக்கும் என்பது உறுதி.

 

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், காட்சிகளை பிரம்மாண்டமாகவும், கதாப்பாத்திரங்களை அழகாகவும் காட்டியிருக்கிறார்.

 

 

காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.நிர்மல், படம் ஆரம்பமான உடனே நம்மை கதைக்குள் பயணிக்க வைப்பதோடு, பாடல்களை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி படத்தை வேகமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

இது தான் கதை, என்பதை படத்தின் துவக்கத்திலேயே சொல்லிவிடும் இயக்குநர் நெல்சன், தனது திரைக்கதை யுக்தியால், படத்தை இறுதி வரை காமெடியாக மட்டும் இன்றி வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கிறார்.

 

சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களை கூட ரசிக்கும்படி காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனையும் ஒரு கதாப்பாத்திரமாக கையாண்டிருந்தாலும், கிடைக்கும் கேப்புகளில் அவரை மாஸாகவும் காட்டியிருக்கிறார்.

 

இரண்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியாதவாறு, படம் சுவாரஸ்யமாக நகர்வதால், படத்தில் இருக்கும் குறைகள் நம் கண்ணுக்கு தெரியவில்லை.

 

மொத்தத்தில், இந்த’ டாக்டர்’ கொடுப்பது மருந்தல்ல, சிரிப்பு என்ற இனிப்பு.

 

ரேட்டிங் 4/5