May 13, 2022 05:47 AM

’டான்’ விமர்சனம்

175f43373945f3dad923f0522d59f6a3.jpg

Casting : Sivakarthikeyan, Priyanka Mohan, SJ Surya, Samuthirakkani, Kali Venkat, Munishkanth, Bala Saravanan, VJ Vijay, Shivangi

Directed By : Sibi Chakravarthy

Music By : Anirudh

Produced By : Lyca Productions and Sivakarthikeyan Productions

 

படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று சொல்லும் கண்டிப்பான அப்பாவிடம் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன், பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனக்கு பிடித்ததை செய்யலாம் என்று நினைக்கிறார். ஆனால், அவரோட அப்பா சமுத்திரக்கனி அவருக்கு பிடிக்காத பொறியியல் படிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அப்பாவின் விருப்பத்துக்காக பொறியியல் கல்லூரியில் சேரும் சிவா, கல்லூரி வாழ்க்கையை ஜாலியாக ஓட்டிட்டு, தனக்கு உள்ளே இருக்கும் திறமையை கண்டுபிடித்து, அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று நினைக்கிறார்.

 

ஆனால், தன்னோட அப்பாவை போல அந்த கல்லூரியும் ரொம்ப கண்டிப்பான கல்லூரியாக இருப்பதோடு, அங்கேயும் படிப்பை தவிர வேறு எதுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எந்த நேரமும் படி படி என்று மாணவர்களை பந்தாடுகிறார்கள்.  இதனால் கடுப்பாகும் சிவகார்த்திகேயன் தனது கிரிமினல் மூளையை பயன்படுத்தி கல்லூரியின் கண்டிப்புக்கு காரணமான எஸ்.ஜே.சூர்யா கல்லூரியை விட்டு போகும்படி செய்கிறார். இதனால், அவரை ஒட்டுமொத்த கல்லூரியும் டானாக கொண்டாடுகிறது. 

 

இதற்கிடையே ஹீரோயின் பிரியங்கா மோகன் கல்லூரிக்குள் எண்ட்ரி கொடுக்க, அவங்களுக்கும் சிவாவுக்கும் இடையே இருக்கும் பள்ளி பருவ பிளாஷ்பேக் எப்பிசோட் பிறகு கல்லூரி காதல் என்று சிவாவின் கல்லூரி நாட்கள் ஜாலியாக போய்க்கொண்டிருக்கும் போது மீண்டும் எண்ட்ரி கொடுக்கும்  எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயனை கல்லூரியை விட்டு துரத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். எஸ்.ஜே.சூர்யாவின் முயற்சிகளை முறியடித்து சிவகார்த்திகேயன் கல்லூரி படிப்பை முடித்தாரா இல்லையா, தனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து வாழ்க்கையில் ஜெயித்தாரா இல்லையா, என்பதை காமெடியும், செண்டிமெண்டும் கலந்து சொல்லியிருப்பது தான் ‘டான்’.

 

கல்லூரி மாணவர் வேடத்திற்காக சிவகார்த்திகேயன் அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார் என்றால், பள்ளி மாணவர் வேடத்திற்கு அளவுக்கு அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார். முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி செண்டிமெண்ட் என்று முழு படத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்திருக்கும் சிவகார்த்திகேயன், பள்ளி மாணவராக வரும் போது சில இடங்களில் வித்தியாசமான உடல் மொழி மூலமாகவும் ரசிக்க வைக்கிறார்.  காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்து ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் சிவகார்த்திகேயன், நடிப்பில் தான் சகலகலா வல்லவன் என்று நிரூபித்திருக்கிறார்.

 

கண்டிப்பான கல்லூரி நிர்வாகியாக அறிமுகமாகி பிறகு கல்லூரியின் முதல்வராகி சிவகார்த்திகேயனுக்கு செக் வைக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கம் போல தனது ட்ரேட் மார்க் நடிப்பால் அதகளம் செய்கிறார். அதே சமயம், தன்னோட ஓவர் ஆக்டிங்கை கைவிட்டு, அளவாகவும் நடித்திருக்கிறார்.

 

ஹீரோவோடு மோதல் பிறகு காதல் என்று வழக்கமான கமர்ஷியல் பட கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தாலும், அவருடைய கதாப்பாத்திரம் கதையுடன் பயணிப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

 

Don Review

 

சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவாக பேசி நிறைவாக நடித்திருக்கிறார். அவர் பக்கம் பக்கமாக வசனம் பேச பல இடங்களில் வாய்ப்பு இருந்தாலும், அவரை பேச வைக்காமல் முழுக்க முழுக்க நடிக்க மட்டுமே வைத்திருப்பது புதிய சமுத்திரக்கனியை பார்ப்பது போல் இருக்கிறது.

 

சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் பால சரவணன், விஜே விஜய், ஷிவாணி, முனிஷ்காந்த், காளிவெங்கட் என அனைவரும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை. கொடுத்த வேலையை மட்டும் சரியாக செய்திருக்கிறார்கள்.

 

குறைவான காட்சிகளில் வந்தாலும் சூரி ஸ்கோர் செய்து விடுகிறார். அதிலும் சிவகார்த்திகேயனின் அப்பாவாக வேடம் போட்டு கல்லூரியில் அவர் அடிக்கும் லூட்டி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. அந்த பாடல்களை திரையில் பார்க்கும் போது ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பவர் கதாப்பாத்திரங்களை சில இடங்களில் டல்லாக காட்டியிருக்கிறார்.

 

பிள்ளைகளிடம் கண்டிப்போடு நடக்கும் அப்பாக்கள் அனைவரும் தங்களுக்காக வாழ்வதை விட தங்களது பிள்ளைகளுக்காக தான் வாழ்கிறார்கள், என்பதை பல தமிழ் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதை கல்லூரி பின்னணியோடு ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.

 

முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி செண்டிமெண்ட் இதற்கு நடுவே சிவாவுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே நடக்கும் நீயா நானா மோதல், காதல், அப்பா மகன் செண்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதையோடு, முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

 

திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சி அமைப்புகளில் சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அதை தனது காமெடி நடிப்பு மூலம் சரிக்கட்டி விடும் சிவகார்த்திகேயன் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, சலிப்படையாமல் பார்த்துக்கொள்கிறார்.

 

கண்டிப்பான பெற்றோர்களை பிள்ளைகள் புரிந்துக்கொள்வதோடு, கண்டிப்பான ஆசிரியர்களையும் மாணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும், என்ற மெசஜை கலர்புல்லான கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி, அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை தாரளாமக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘டான்’ டபுள் ஒகே.

 

ரேட்டிங் 3.75/5