Dec 22, 2023 01:42 AM

’டங்கி’ திரைப்பட விமர்சனம்

c50aa8713a78f9d2e9f818d39a10587a.jpg

Casting : Sharukh Khan, Tapsi, Vicky Gousal, Bomman Irani

Directed By : Rajkumar Hirani

Music By : Preetham and Aman Panth

Produced By : Jio Studios, Red Chilies Entertainment and Rajkumar Hirani Films

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டில் மனித வளம் குறைந்ததால், பிற நாட்டு மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதை பயன்படுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பலர் இங்கிலாந்து நாட்டுக்கு வேலைக்காக செல்கிறார்கள். அந்த வகையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த டாப்ஸி பண்ணு மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் அதற்கான தகுதி இல்லாததால் அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால், போலியான முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறும் டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களை முன்னாள் ராணுவ வீரரான ஷாருக்கான், டங்கி வழி என்று சொல்லக்கூடிய சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அப்படி செல்லும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, அவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார்களா? இல்லையா? என்பது தான் ‘டங்கி’ படத்தின் மீதிக்கதை.

 

இளைஞர் மற்றும் முதியவர் என்று இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கும் ஷாருக்கான், இரண்டு கெட்டப்புகளுக்குமான வித்தியாசத்தை காட்டுவதற்காக உடல் ரீதியாக எந்த முயற்சியும் செய்யாமல், நரை முடி மற்றும் தாடியுடன் வயதானவராகவும், மீசை மற்றும் தாடி இல்லாமல் இளைஞராகவும் நடித்திருக்கிறார். வழக்கம் போல் காதல் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியிருக்கும் ஷாருக்கான், நகைச்சுவை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

 

டாப்ஸி பண்ணு ஷாருக்கானுடனான காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அவருக்கும், ஷாருக்கானுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இங்கிலாந்தில் கணவரால் கொடுமைப்படுத்தப்படும் தனது காதலியை மீட்பதற்காக இங்கிலாந்து செல்ல முயற்சிக்கும் சுகி, அது முடியாமல் போகும் போது கதறுவதும், பிறகு தனது காதலிக்கு நேர்ந்த சோகத்தால் எடுக்கும் முடிவும் கலங்க வைக்கிறது. டாப்ஸியின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் பொம்மன் இராணி ஆகியோரின் வேடமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

முதல் பாதி படத்தை நகைச்சுவையாக நகர்த்தினாலும், வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்திருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, இங்கிலாந்துக்கு செல்லவதற்கான காரணத்தை மட்டும் மிக எளிமையானதாக சொல்லியிருக்கிறார். சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்கு செல்லும் போது, அதிலும் பல நாடுகளை கடந்து இங்கிலாந்துக்கு செல்பவர்கள் எப்படிப்பட்ட இடையூறுகளை கடந்து செல்வார்கள் என்பதை இயல்பாக அல்லாமல் சினிமாத்தனமாக காட்டியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக இருப்பதோடு, ஒரு நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் பற்றி அழுத்தமாக பேசும் காட்சிகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

ஷாருக்கானின் ரசிகர்களை திருப்திப்படுத்தினால் போதும் என்ற கோணத்தில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சில உண்மை புகைப்படங்களை காட்டி, சட்டவிரோதமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது பற்றி எச்சரிக்கும் இடமும், அந்த புகைப்படமும் பதற வைக்கிறது.

 

சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் மற்றும் குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஷாருக்கானை மிக இளமையாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர்கள் டங்கி பாதை பயணத்தை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.

 

இசையமைப்பாளர் ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அமன்  பந்தின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

’பிகே’ படத்தில் பேசிய அரசியல் போல் இந்த படத்தில் உலக அரசியல் மற்றும் அகதிகளின் வலிகளை பேச அதிகம் வாய்ப்பு இருந்தாலும், அதை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தவிர்த்திருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், நகைச்சுவை வசனங்கள் அதை கையாண்ட விதம், ஷாருக்கான் - டாப்ஸி இடையிலான காதல் காட்சிகள் மற்றும் ஷாருக்கானின் செண்டிமெண்ட் காட்சிகள் ஆகியவை கவனம் ஈர்க்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘டங்கி’ மூலம் ஷாருக்கானின் வெற்றி பயணம் தொடரும்.

 

ரேட்டிங் 3.5/5