May 09, 2025 10:07 AM

‘என் காதலே’ திரைப்பட விமர்சனம்

6e37680f57d29d992a15283300de9053.jpg

Casting : Ligesh, Lia, Divya, Katpadi Rajan, Maran, Kanja Karuppu, Madhusudhan Rao, Darshan

Directed By : Jayalakshmi

Music By : Sandy Sandallo

Produced By : Sky Wanders - Jayalakshmi

 

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த நாயகன் லிங்கேஷை, அவரது தாய் மாமன் வளர்க்கிறார். மாமன் மகளான நாயகி திவ்யா, லிங்கேஷை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். லிங்கேஷும் அவர் மீது அக்கறையும், அன்பும் கொண்டவராக இருக்கிறார். இதற்கிடையே, தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வரும் வெளிநாட்டு பெண் லியா - லிங்கேஷ் இடையே காதல் மலர்கிறது. லிங்கேஷ் மீது உயிராக இருக்கும் அவரது மாமன் மகளான நாயகி திவ்யாவின் காதல் என்ன ஆனது?, என்பதை சொல்வது தான் ‘என் காதலே’.

 

நாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ், நாயகிகளாக நடித்திருக்கும் திவ்யா மற்றும் லண்டன் பெண் லியா மூன்று பேரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மூவரும் தங்கள் காதல் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

காட்பாடி ராஜன், மதுசூதன் ராவ், தர்சன், என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் படத்தின் ஆரம்பத்தில் முக்கியமான கதாபாத்திரங்களாக அறிமுகமானாலும், அதன் பிறகு திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்து மறைந்து போகிறார்கள்.

 

கஞ்சா கருப்பு மற்றும் மாறன் கூட்டணியின் காமெடி சிரிக்க வைக்கிறது.

 

இசையமைப்பாளர் சாண்டி சாண்டல்லோ இசையில் பாடல்கள் அனைத்தும் முனுமுனுக்க வைக்கும் ஹிட் ரகங்களாக இருப்பதோடு, வார்த்தைகள் தெளிவாக புரியும்படியும் இருக்கிறது. மெலொடி பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை அளவு.

 

ஒளிப்பதிவாளர்கள் டோனிசென் மற்றும் வெங்கடேஷ், கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் கதை மட்டும் இன்றி கதாபாத்திரங்களையும் பளிச்சென்று காட்டி, பார்வையாளர்கள் நெஞ்சத்தில் பசைப்போட்டு ஒட்டிக்கொள்ள செய்திருக்கிறார்கள்.

 

படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் ரஞ்சித் ஆகியோரது பணியில் குறையில்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் ஜெயலட்சுமி, முக்கோண காதல் கதையை அழகியலோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். காட்சிகளில் புதுமை இல்லை என்றாலும், தேவையில்லாத விசயங்களை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

 

பெண் தரப்பு காதல் மற்றும் அதன் தோல்வியை சொல்லும் திரைப்படங்கள் வருவது தமிழ் சினிமாவில் அரிதான ஒன்று. அந்த வகையில், பெண் காதல் தோல்வியையும், அதன் வலியையும் சொல்லும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.

 

மொத்தத்தில், ‘என் காதலே’ பாதிக்கும்.

 

ரேட்டிங் 3/5