‘ப்ரீடம்’ திரைப்பட விமர்சனம்

Casting : M. Sasikumar, Lijo Mol Jose, Mu Ramaswamy, Sudev Nair, Malavika Avinash, Saravanan, Bose Venkat, Ramesh Khanna, Manigandan
Directed By : Sathyasiva
Music By : Ghibran
Produced By : Pandiyan Parasuraman
1991 ஆம் ஆண்டு கள்ளத்தோணி மூலம் தமிழகத்திற்கு வரும் சசிகுமார் உள்ளிட்ட பல ஈழத்தமிழர்கள் இராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்போது, இந்திய பிரதமர் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்படுகிறார். இதனால், சமீபத்தில் இலங்கையில் இருந்து வந்தவர்களை விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லும் தமிழக காவல்துறை, அவர்களை வேலூர் கோட்டையில் சிறை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் அடைத்து வைக்கிறது. விசாரணை என்ற பெயரில் பல வருடங்களாக கொடுமைகளை அனுபவிக்கும் அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள், ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்ய, அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாகவும், ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சி அமைப்புகளோடும் சொல்வது தான் ‘ப்ரீடம்’.
இலங்கையில் அனுபவிக்கும் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் பலர் இலங்கையை விட அதீத கொடுமையை இங்கு அனுபவித்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சத்யசிவா, உணர்வுப்பூர்வமான படைப்பாக மட்டும் இன்றி விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்.
ஈழத்தமிழராக நடித்திருக்கும் சசிகுமார், வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி என சிறப்பாக நடித்திருக்கிறார். காவல்துறையின் கொடூர செயல்களினால் துடிக்கும் ஈழத்தமிழர்களின் வலியை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் லிஜிமோல் ஜோஸை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் பண்ண முடியாது, என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
சசிகுமாருடன் சிறையில் இருக்கும் மு.ராமசாமி, மணிகண்டன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நடிப்பில் மிரட்டுகிறார்கள்.
புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் சுதேவ் நாயர், வழக்கறிஞராக நடித்திருக்கும் மாளவிகா என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசை திரைக்கதையில் இருக்கும் கனத்தையும், காட்சிகளில் இருக்கும் பதற்றத்தையும் அதிகரித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் உதயகுமார், சிறையில் நடக்கும் கொடூரங்களையும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி மற்றும் கலை இயக்குநர் சி.உதயகுமார் ஆகியோரது பணியும் படத்திற்கும் பலம் சேத்திருக்கிறது.
ராஜீவ் காந்தி கொலையின் போது, தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் சத்யசிவா, மறைக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். கதாபாத்திரங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் பார்வையாளர்களின் மனதை உலுக்கி எடுத்திருக்கும் இயக்குநர் சத்யசிவா, விறுவிறுப்பான காட்சி அமைப்பால் சிறந்த மேக்கிங் மூலமாகவும் மிரட்டியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ப்ரீடம்’ தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரேட்டிங் 3.5/5