Nov 27, 2025 08:16 PM

’ஃப்ரைடே’ (Friday) திரைப்பட விமர்சனம்

1843b44fda64faa7e0eb21cd57d401d4.jpg

Casting : Anish Masilamani, Maim Gopi, KPY Theena, Ramachandra Durairaj, Kalaiyarasan, Chitra Senan, Sidhu Kumaresan

Directed By : Hari Venkateshan

Music By : Dume

Produced By : Dakdam Motion Pictures - Anish Masilamani

 

நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், தீனா எதிர்பாராத விதமாக தாக்குதலுக்கு ஆளாக, அவரை காப்பாற்றுவதற்காக அனிஷ் மாசிலாமணி அவருடன் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகிறார். அவரிடம் இருந்து தப்பித்தவர், தனது ஆட்களுடன் தன்னை கொலை செய்ய முயன்றவர்களை தேடுகிறார்கள். மறுபக்கம், தீனாவும் அனிஷ் மாசிலாமணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடும் கூட்டம் ஒன்றுக்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறார். 

 

அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார் ?,  அவரை கொலை செய்ய முயற்சிப்பவர்களுக்கு அவருடன் இருக்கும் தீனா ஏன் உதவி செய்கிறார் ?, இவற்றில் இருந்து அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? இல்லையா ?, என்பதை குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அத்தகைய வாழ்க்கையில் அவர்கள் எப்படி தள்ளப்படுகிறார்கள், என்பதை விவரிக்கும் விதமாக சொல்வதே ’ஃப்ரைடே’.

 

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு, என்ற வார்த்தை தான் படத்தின் கருவாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைப்பதோடு, சில இடங்களில் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அனிஷ் மாசிலாமணி, எளிமையான தோற்றம், அளவான நடிப்பு மூலம் மணி என்ற ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக, தான் ரவுடியாக்கப்பட்ட சூழ்நிலையை நினைத்து வருந்துவதோடு, தனது தம்பியை அத்தகைய இடத்திற்கு வர விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது, என்று ஒவ்வொரு காட்சியிலும் அவரது முதிர்ச்சியான நடிப்பு பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறது.

 

கே.பி.ஒய் தீனா, ஆரம்பத்தில் எளிமையான கதாபாத்திரமாக இருந்தாலும், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து திரைக்கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.

 

மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக மட்டும் இன்றி, தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகியோர் சில இடங்களில் மட்டுமே தோன்றும் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும், திரைக்கதையில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், எளிமையான லொக்கேஷன்களாக இருந்தாலும், அவற்றை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி கதைக்களத்தின் பயங்கரத்தை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

 

பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள இடங்களில் இசையமைப்பாளர் டுமே, சில இடங்களில் தட்டுமுட்டு சாமான்களை தட்டுவது போல் இருந்தாலும், பல இடங்களில் தன் பின்னணி இசையால் திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பளித்திருக்கிறார்.

 

வெட்டு, குத்து என்று பயணிக்கும் ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக சொன்னாலும், வன்முறை காட்சிகளை கூட, திரைக்கதையின் சுவாராஸ்யத்தை அதிகரிக்கும் அம்சங்களாக்கி பார்வையாளர்களை அவ்வபோது சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது பிரவீன்.எம்-ன் படத்தொகுப்பு.

 

எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், ஒரு சாதாரண கதையை, விவரிக்கும் விதம் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.

 

வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தம் தெறிக்கும் விதமாக காட்டாமல், அவர்களின் குடும்பம், எதிர்பார்ப்பு, சோகம், காதல், இழப்பு, பழிதீர்க்கும் எண்ணம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு இயல்பான வாழ்க்கையாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஹரி வெங்கடேஷ், அதை திரை மொழியில் சுவைப்பட சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ஃப்ரைடே’ சினிமா ரசிகர்களுக்கான படம்.

 

ரேட்டிங் 3.2/5