Mar 13, 2024 05:29 PM

’காமி’ (GAAMI-Telugu) தெலுங்குத் திரைப்பட விமர்சனம்

be2cc30b683428da08865131cbba71b6.jpg

Casting : Vishwak Sen, Chandini Chowdary, Abhinaya, Harika Pedda

Directed By : Vidyadhar Kagita

Music By : Sweekar Agasthi and Naresh Kumaran

Produced By : Karthik Kult Kreations, V Celluloid, VR Global Media, Swetha Vahini Studios Ltd, Clown Pictures - Karthik Sabareesh

 

காசியில் சுற்றித்திரியும் நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேரங்கள் செயலற்று போய் விடுவார். தனக்குள் இருக்கும் இத்தகைய பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வைத்தியர் ஒருவரை அவர் அணுகிறார். ஆனால், இப்படிப்பட்ட பாதிப்பை குணப்படுத்த தன்னிடம் மருந்து இல்லை என்று கூறும் அந்த வைத்தியர், இதை குணப்படுத்தக் கூடிய அரியவகை காளான் ஒன்று இமயமலைப் பகுதியில் இருப்பதாகவும்,  36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும் இந்த காளான் வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.

 

அதன்படி, அந்த அதிசய காளான் குறித்து பல வருடங்களாக ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவர் சாந்தினி செளத்ரியுடன் சேர்ந்து, காளானை எடுப்பதற்காக நாயகன் விஷ்வக் சென், ஆபத்து நிறைந்த இமயமலைப் பகுதிக்கு பயணப்படுகிறார். இதற்கிடையே, அவரது நினைவுகளில், ஆபத்தில் இருக்கும் சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு சொல்வது போலவும், சிறுமி ஒருவரும் அடிக்கடி வருகிறார்கள். அவர்கள் யார்? எதற்காக தன் நினைவுகளில் வருகிறார்கள்? என்ற குழப்பத்தோடு தனது பயணத்தை தொடர, அங்கு பல்வேறு ஆபத்துகளையும் நாயகன் சந்திக்கிறார். அந்த ஆபத்துக்களை கடந்து காளானை அவர் எடுத்தாரா? இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க, அவரது நினைவில் வரும் அந்த சிறுவனும், சிறுமியும் வெவ்வேறு ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள்.

 

காசியில் சுற்றித்திரியும் நாயகன் விஷ்வக் சென் யார்?, அவருக்கும் ஆபத்தில் சிக்கித்தவிக்கும் சிறுவன் மற்றும் சிறுமிக்கும் என்ன தொடர்பு? என்பதை இதுவரை இந்திய சினிமாவில் இப்படி ஒரு விசயத்தை சொல்லியிருப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கருப்பொருளோடு சொல்வது தான் ’காமி’.

 

நாயகன் விஷ்வன் சென் கதாபாத்திரம் மூலம் தொடங்கும் கதை, அவருடைய சாகசம் நிறைந்த பயணத்தோடு சுவாரஸ்யமாக பயணித்தாலும், அவ்வபோது வரும் ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன் மற்றும் கிராமத்து கட்டுப்பாட்டினால் தேவதாசியாக தள்ளப்படும் சிறுமியின் கதைகள், எதிர்பார்ப்புடனும், சற்று குழப்பத்துடனும் படத்தை நகர்த்திச் செல்கிறது.

 

நாயகனாக நடித்திருக்கும் விஷ்வன் சென், அவருடன் இமயமலைக்கு பயணப்படும் மருத்துவராக நடித்திருக்கும் சாந்தினி செளத்ரி, சிறுமி ஹரிகா பெட்டா, சிறுமியின் அம்மாவாக நடித்திருக்கும் அபிநயா, ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன், என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

சாகசம் நிறைந்த பயணம் தான் கதை என்றாலும், அதற்கான திரைக்கதையை வித்யாதர் ககிடா மற்றும் பிரத்யூஷ் வத்யம்  வித்தியாசமான முறையில் வடிவமைத்திருப்பதோடு, யூகிக்க முடியாத திருப்பங்களோடு சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்கள்.

 

மூன்று கதைகள் சொல்லப்பட்டாலும், மூன்று கதைகளுக்கும், மூன்று கதாபாத்திரங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது, என்பதை பார்வையாளர்கள் யூகித்தாலும், அந்த தொடர்பு என்ன? என்பது குறித்து கிளைமாக்ஸ் நெருங்கும் வரை நிச்சயம் யாராலும் யூகிக்க முடியாது, அப்படி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறார்கள்.

 

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் VFX காட்சிகள் தான். இமயமலைப் பயணத்தையும், அதில் ஏற்படும் ஆபத்துக்களையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மிக தத்ரூபமாக VFX பணிகளை மேற்கொண்டு அசத்தியிருக்கிறார்கள். 

 

ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சிகள் தொடர்பான காட்சிகள் குறைவு என்றாலும், அவை அனைத்தும் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது. அபிநயாவின் தாய் பாசம் மற்றும் சிறுமி அனுபவிக்கும் கொடுமைகள் பார்வையாளர்களின் இதயத்தை கணக்கச் செய்கிறது.

 

மூன்று கதைகளிலும், மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை படத்தோடு ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர் வித்யாதர் ககிடா, மருத்துவ குனம் கொண்ட காளானை மையமாக வைத்துக்கொண்டு அறிவியல் தொடர்பான கதை சொல்லாமல் ஆன்மீக தொடர்பான கதை சொல்வது சற்று நெருடலாக இருந்தாலும், காட்சி மொழி மூலம் அவர் சொல்லியிருக்கும் விசயங்களை, தாய்மொழி கடந்து ரசிக்க முடிகிறது. 

 

அதே சமயம்,ஆபத்து மிக்க பயணத்தில், அவ்வபோது உயிர் போகும் அளவுக்கு நாயகன் ஆபத்தில் சிக்கினாலும், அடுத்த காட்சியில் அசால்டாக பிழைத்துவிடுவதும், அவருடன் பயணிப்பவரும் அதேபோல் ஆபத்துக்களை அசால்டாக கடந்து செல்வதும், லாஜிக் மீறலாக இருக்கிறது. அப்படிப்பட்ட காட்சிகளின் போது நமக்கு லேசாக கொட்டாவி வந்தாலும், சிறுவனின் தப்பிக்கும் முயற்சியும், சிறுமி எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் நம் தூக்கத்தை போக்கி படத்தை கவனிக்க வைத்துவிடுகின்றன.

 

விஷ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு, நரேஷ் குமரன் பின்னணி இசை, ஸ்வீக்கர் அகஸ்த்தியின் இசையில் பாடல்கள், ராகவேந்திர திருனின் படத்தொகுப்பு என அனைத்தும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

மொத்தத்தில், சிறு குறைகள் இருந்தாலும், இந்த  ‘காமி’ மொழிகளை தாண்டி ரசிகர்களை ரசிக்க வைக்கும் காட்சி மொழியாக வெற்றி பெற்றிருக்கிறது.

 

ரேட்டிங் 3.3/5