Sep 05, 2025 03:21 AM

’காந்தி கண்ணாடி’ திரைப்பட விமர்சனம்

c3af6c67113c263bef5185618f34e245.jpg

Casting : KPY Bala, Namita Krishnamurthy, Balaji Sakthivel, Archana, Nikhila Sankar, Jeeva Subramanian, Aradhya Ritu Sara, Amudhavaanan, Manoj Prabhu, Madhan

Directed By : Sherief

Music By : Vivek–Mervin

Produced By : Adhimulam Creations - Jayi Kiran

 

காதலியை கரம் பிடிப்பதற்காக சொத்து மற்றும் சொந்தங்களை விட்டுவிட்டு சென்னைக்கு வரும் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி சக்தி வேல், தனது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தம்பதிக்கு வாரிசு இல்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதல், அவர்கள் காதலிக்க தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் இருந்து 60 வயது வரை அப்படியே மாறாமல் இருக்கிறது. 

 

இதற்கிடையே, தனது காதல் மனைவி அர்ச்சனாவின் 60 வது கல்யாணம் ஆசையை நிறைவேற்றுவதற்காக, பணம் மட்டுமே வாழ்க்கை என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் பாலாவை, பாலாஜி சக்திவேல் சந்திக்கிறார். நிகழ்ச்சி வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வரும் பாலா, பாலாஜி சக்திவேல் - அர்ச்சனா தம்பதியின் 60 வது கல்யாணத்தை லாபம் தரும் ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார். ஆனால், பாலாஜி சக்திவேல் தனது காதல் மனைவியின் ஆசை மட்டும் இன்றி ஏக்கமாக பார்ப்பவர், எப்படியாவது அவர் ஆசைப்பட்டது போல் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். 

 

அர்ச்சனாவின் ஆசைப்படி 60 வது கல்யாணத்தை மிக பிரமாண்டமாக நடத்த பாலா கேட்ட பல லட்சங்களுக்கு மேலான பணம் பாலாஜி சக்திவேலுக்கு கிடைக்கிறது. பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பாலாவும், மனைவிவியின் ஆசையை நிறைவேற்ற போகிறோம், என்ற மகிழ்ச்சியில் பாலாஜி சக்திவேலும் இருக்க, அரசு அறிவிப்பின் மூலம் அவர்களிடம் இருக்கும் பணம் செல்லாமல் போகிறது.

 

பணத்தை மாற்றி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் நினைக்க, அதே சமயம் பணம் மாற்றுவதையும் லாப நோக்கத்துடன் பார்க்கும் நாயகன் பாலா, பாலாஜி சக்திவேல் ஆசைப்பட்டது போல், 60 வது கல்யாணத்தை நடத்தினாரா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘காந்தி கண்ணாடி’.

 

நாயகனாக நடித்திருக்கும் பாலாவுக்கு இது தான் முதல் படம் என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. தொலைக்காட்சி பாலாவுக்கும், வெள்ளித்திரை பாலாவுக்கும் உருவம் ரீதியாக மாற்றங்கள் தெரிந்தாலும், நடிப்பில் அவர் இன்னும் முன்னேற வேண்டும் என்பது தான் உண்மை. நடனம் நன்றாக ஆடுகிறார், அவ்வபோது தனது டைமிங் காமெடி வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார், செண்டிமெண்ட் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அனைத்தும் முயற்சியாக மட்டுமே இருக்கிறதே தவிர சிறப்பானதாக இல்லை. இது முதல் படம் என்பதால் அடுத்தடுத்த படங்களில் பாலாவின் நடிப்பு திறமை அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணித்து பாராட்டு பெறும் என்று நம்புவோம்.

 

Gandhi Kannadi Review

 

படத்தின் உண்மையான நாயகனாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், எதார்த்தமான நடிகராக மட்டும் இன்றி உணர்வுப்பூர்வமான நடிகராக கவனம் ஈர்க்கிறார். தன் காதல் மனைவி மீது அவர் காட்டும் அளவுக்கு அதிகமான அன்பை போலவே, சில இடங்களில் அவரது நடிப்பும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, நாக்கை கடித்துக்கொண்டு உடல்மொழியை வெளிப்படுத்துவதை தொடர்ந்து பல படங்களில் செய்து வருவது கொஞ்சம் போராடிக்க செய்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். பாலாஜி சக்திவேலின் மனைவியாக நடித்திருக்கும் அர்ச்சனா தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திற்கும் படத்திற்கும் அடையாளமாக பயணித்திருக்கிறார்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, லைவ் லொக்கேஷன்களில் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேரக் காட்சிகள், கோவில் திருவிழா ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்ப்பவர், கதாபாத்திரங்களையும் பளிச்சென்று காண்பித்திருக்கிறார்.

 

விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் கொண்டாடும் விதமாகவும், திரும்ப திரும்ப கேட்கும் விதமாகவும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

 

இயக்குநரின் கதை மற்றும் திரைக்கதை எளிமையானதாக இருந்தாலும், தன்னால் முடிந்தவரை சுவாராஸ்யமாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைக்க படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் முயற்சித்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஷெரிப், ஏராளமான காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடியும் தற்போதைய காலக்கட்டத்தில், இளமை பருவத்தில் மட்டும் இன்றி, 60 வயதை தாண்டியும், அன்பவை வெளிப்படுத்தி திகிட்ட திகிட்ட காதலிப்பதே உண்மையான காதல், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

 

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு படத்தை தொய்வடைய செய்தாலும், குடும்பத்தோடு பார்க்க கூடிய விதத்தில் படத்தை நாகரீகமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஷெரிப், இளமை பருவத்தில் மட்டும் அல்ல முதுமையிலும் தொடர்வதே உண்மையான காதல் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் முயற்சியில் சற்று சறுக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘காந்தி கண்ணாடி’ பவர் இல்லை.

 

ரேட்டிங் 2.7/5