Feb 21, 2026 12:58 PM

’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்பட விமர்சனம்

7351c6f48ec69ffe0a3fa08cf7abc1c5.jpg

Casting : Vijaya Raghavendra, Gopalkrishna Deshapande, Usha Bhandary

Directed By : Deviprasad Shetty

Music By : Navaneeth Sham

Produced By : Deviprasad Shetty & Sathwik Hebbar

 

’சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18’ மற்றும் ‘கேஸ் ஆஃப் கொண்டனா’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் படம் ‘கேஸ் ஆஃப் சீதாராம்’. முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இருந்தாலும், இந்த பாகத்தை மட்டுமே பார்ப்பவர்களையும் கவரக்கூடிய விதத்தில் இந்த படத்தின் கதை கையாளப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட வயதுடையவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, உடல் முழுவதும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக உடற்கூராய்வு தகவல்கள் தெரிவிப்பதோடு, மனநலம் பாதித்த ஒருவரால் மட்டுமே இப்படி செய்ய முடியும், என்று மருத்துவர் தெரிவிக்கிறார். மருத்துவரின் தகவல் மற்றும் ஒரே மாதிரியான கொலை ஆகிய இரண்டு விசயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, இத்தகைய கொடூர கொலைகள் செய்யும் கொலையாளியை தேடும் காவல்துறை அதிகாரியான நாயகன் விஜய ராகவேந்திரா, கொலையாளியை எப்படி பிடித்தார்? மற்றும் கொலைகளுக்கான பின்னணி என்ன ? என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் விஜய ராகவேந்திரா, காவல்துறையினரின் உடல்மொழியை தனது நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். எந்தவித தடயங்கள் இன்றி கொலையாளியை தேடி செல்லும் அவரது புலனாய்வு பயணமும், விசாரணை மேற்கொள்ளும் தோணியும், அவரோடு படம் பார்ப்பவர்களையும் பயணப்பட வைப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, வித்தியாசமான நடவடிக்கைகளை கொண்ட மிரட்டலான கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் வியக்கும்படி கையாண்டு பாராட்டு பெறுகிறார்.

 

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் உஷா பண்டாரி, அதீதமாக நடிக்க கூடிய இடங்களில் கூட அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் கேமரா, காவல்துறை அதிகாரியின் சிந்தனையோடு படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது. காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளி மற்றும் வண்ணங்கள் படத்தின் மீதான கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கிறது.

 

நவநீத் ஷாமி இசை படத்தின் கதாபாத்திரமாக பயணித்திருக்கிறது. அமைதியான சூழல்களில் கூட பார்வையாளர்கள் மனதில் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

ஷஷாங் நாராயணாவின் படத்தொகுப்பு கூர்மையாக இருந்தாலும், சில இடங்களில் காட்சிகளை மெதுவாக நகர்த்தியிருக்கிறது. 

 

முந்தைய கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாகங்களின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்கியிருக்கும் தேவிபிரசாத் ஷெட்டி, தொடர்புகளை கச்சிதமாக கையாண்டிருப்பது போல், திரைக்கதையில் புதிய அம்சங்களை புகுத்தி, மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார்.

 

தொடர் கொலைகள் மற்றும் அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியின் முயற்சிகள், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை படு சுவாரஸ்யமாக பயணித்தாலும், கொலைகளுக்கான காரணம் அழுத்தமில்லாமல் இருப்பது படத்தை சற்று பலவீனப்படுத்துகிறது. இருந்தாலும், படத்தின் மேக்கிங் மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு , அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு திறன் ஆகியவை பலவீனங்களை மறைத்து, படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.

 

மொத்தத்தில், ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ படபடப்புக்கு பஞ்சமில்லை.

 

ரேட்டிங் 3.3/5