Dec 02, 2022 07:32 AM

‘கட்டா குஸ்தி’ திரைப்பட விமர்சனம்

6d0a2e3f4dcd47964bfe2ce8672536f5.jpg

Casting : Vishnu Vishal, Aishwarya Lakshmi, Karunas, Harish Peraadi, Kali Venkat, Munishkanth, Reding Kingsly,

Directed By : Chella Ayyavu

Music By : Justin Prabhakaran

Produced By : Vishnu Vishal Studioz and RT Teamworks

 

பொள்ளாச்சியை சேர்ந்த விஷ்ணு விஷால், பெற்றோர் சொத்தில் சுகமாக வாழும் இளைஞராக வலம் வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய்மாமன் கருணாஸ் முடிவு செய்ய, தனக்கு வரவேண்டிய மனைவி குறித்து விஷ்ணு விஷால் இரண்டு நிபந்தனைகள் போடுகிறார். அதனாலேயே அவருக்கு பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

 

அதேபோல், கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள். ஆனால், அவர் மல்யுத்த வீராங்கனை என்பதாலேயே அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

 

இதற்கிடையே, இரண்டு பொய்களை சொல்லி விஷ்ணு விஷாலுக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு நடப்பவைகளை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்வது தான் ‘கட்டா குஸ்தி’.

 

வேலை வெட்டி இல்லாமல் முன்னோர்களின் சொத்தை வைத்துக்கொண்டு ஊர் சுற்றும் வாலிபரின் வேடத்திற்கு மிக சரியாக பொருந்தும் விஷ்ணு விஷால், அதற்கு ஏற்றபடி சிறப்பாக நடித்தும் இருக்கிறார். மனைவி தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு விஷால் செய்யும் வேலைகளும், அதில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா லட்சுமியை அடக்கி ஆளும் விஷ்ணு விஷால், அவருடைய சுயரூபத்தை பார்த்த பிறகு மாறும் காட்சிகளில் நடித்த விதம், அவர் எப்படிப்பட்ட வேடத்தையும் சிறப்பாக கையால்வார் என்பதை நிரூபிக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நாயகனையே பின்னுக்கு தள்ளும் மிக முக்கியமான வேடம். அதை மிக சரியாக செய்திருக்கிறார். குஸ்தி போட்டியில் எதிராளியை தூக்கி எறிபவர், தனது கணவனின் எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் ஒட்டு மொத்த திரையரங்கையே எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார். மல்யுத்த வீராங்கனையாக இருந்தாலும், தனது கணவனை பிடிக்கும் என்று சொல்லி, அவரிடம் அமைதி காக்கும் காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறவர், மாஸான காட்சிகளில் மிரட்டுகிறார்.

 

விஷ்ணு விஷாலின் தாய்மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ், காமெடி நடிகராக சிரிக்க வைப்பதோடு, குணச்சித்திர நடிகராக கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவர் தனது மனைவியிடம் பேசும் ஆங்கிலம் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

காளி வெங்கட், முனிஷ்காந்த், ஹரிஷ் பெராடி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், காளி வெங்கட் கருணாஸை பார்த்து, “அவங்க அம்மா கிட்ட மட்டுமா வாங்கி குடிச்ச, சின்னம்மாகிட்டயும் தானே வாங்கி குடிச்ச” என்று பேசும் வசனத்திற்கு தியேட்டரே ஆரவாரம் செய்கிறது.

 

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் அழகாக காட்டியிருக்கிறது. பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு என்ற கதைக்களங்களை கண்ணுக்கு குளிச்சியாக காட்டியிருப்பதோடு, மல்யுத்த போட்டியை இயல்பாக படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் எம்.நாதன்.

 

ஜஸ்டின் பிரபாகரனின் இசை கதையோடு பயணித்துள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் மென்மையாக கொடுத்திருக்கிறார்.

 

மல்யுத்தத்தை சார்ந்த சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி அமைத்திருக்கிறார்கள் சண்டைக்காட்சி இயக்குநர்கள் அன்பறிவ்.  பிரசன்னா ஜி.கே-வின் படத்தொகுப்பு காமெடி காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்து சிரிப்பு சரவெடியாக கொடுத்திருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் செல்லா அய்யாவு முழுக்க முழுக்க காமெடியோடு கதையை நகர்த்தியிருந்தாலும், பெண்கள் பற்றி மிக அழுத்தமான மெசஜை சொல்லியிருக்கிறார். குறிப்பாக கணவன் - மனைவி இடையிலான உறவு குறித்து சொல்லியிருக்கும் மெசஜ் பாராட்டும்படி உள்ளது.

 

மனைவிகள் குறித்து கருணாஸ் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், மறுபக்கம் பெண்கள் கணவன்கள் பற்றி சொல்லும் விஷயங்களை வைத்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

 

ஒரு கமர்ஷியல் படத்தில் கதாநாயகிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதே இப்படத்திற்கான தனி சிற்ப்பாக இருக்கிறது. அதே சமயம் நாயகன் வேடத்தையும் சரியாக பயன்படுத்தி, அதை அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாக கொடுத்ததோடு, அதில் ஒரு நல்ல மெசஜையும் வைத்த இயக்குநர் செல்லா அய்யாவுவை வெகுவாக பாராட்டலாம்.

 

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் சிந்திக்க வைக்கும் இயக்குநர் படத்தின் இறுதியில் நாயகன் விஷ்ணு விஷால் மூலம் பேசும் வசனங்கள்,  தம்பதிகளுக்கான அறிவுரை.

 

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி’ குடும்பத்தோடு பார்க்க வேண்டிய சிறப்பான படம் மட்டும் அல்ல கணவன் - மனைவிக்கான பாடமும் கூட.

 

ரேட்டிங் 4.5/5