Jul 17, 2025 08:13 PM

‘கெவி’ திரைப்பட விமர்சனம்

0f7309d4759680e386be44a3f5355a0b.jpg

Casting : Aadhavan, Sheela, Jaqueline Lydia, Charles Vinoth, Gayathri, Vivek Mohan

Directed By : Tamil Dhayalan

Music By : Balasubramaniyan.G

Produced By : Mani Kannan, Perumal Govindasamy, Jagan Jayasurya

 

சாலை வசதி, மருத்துவ வசதி இல்லாத மலை கிராமம் ஒன்றில் வாழும் நாயகன் ஆதவன், தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களை சந்திக்க வரும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதோடு, அவர்களுடன் வந்த வனத்துறை காவலர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார். இதனால், அவர் மீது கோபமடையும் வனத்துறை அதிகாரி அவரை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டு விட்டு, மலையை விட்டு கீழே இறங்கும் போது, வனத்துறை அதிகாரியும், காவலர்களும் சேர்ந்து ஆதவனை கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட, போக்குவரத்து வசதியில்லாத அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. 

 

வனத்துறை காவலர்களிடம் சிக்கி நாயகன் உயிருக்கு போராட, மறுபக்கம் அவரது கர்ப்பிணி மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற கிராம மக்கள் போராடுகிறார்கள், இறுதியில் இவர்களது போராட்டம் என்ன ஆனது? என்பதை வலி மிகுந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் சொல்வதே ‘கெவி’.

 

கதையின் நாயகனாக மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார். வனத்துறை காவலர்களிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் கலங்கடித்து விடுகிறார். அவர் ஒவ்வொரு முறையும் தப்பித்து மீண்டும் அவர்களிடம் சிக்கும் போது, பார்வையாளர்கள் மனம் பதபதைக்கிறது.

 

நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா, எப்போதும் போல் இயல்பாகவும், பாவமாகவும் நடித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். பிரசவ வலியால் தவிப்பவர், டோலியில் பயணித்தாலும், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

 

பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, கடுக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேனாக நடித்திருக்கும் உமர் ஃபரூக் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா, ஆபத்தான மலை கிராமங்களையும், அதில் வாழும் மக்களின் வலியையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். 

 

இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி-ன் இசையில், வைரமுத்து, யுகபாரதி, வினையன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதைக்களத்தில் இருக்கும் ஆபத்தை பார்வையாளர்கள் உணரச் செய்து, இறுதி வரை பதற்றத்துடன் பயணிக்க வைக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் ஹரி குமரன், படத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் விபத்தில் தொடங்கி, இறுதிக் காட்சி வரை அம்மக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் அபாயங்களையும், அவற்றை தாண்டிய அவர்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

 

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் தற்போதைய நவீன காலக்கட்டத்திலும், மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வலியையும், அவர்கள் அன்றாட சந்திக்கும் உயிர் பலியையும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தமிழ் தயாளன், அவர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்திக்கும் ஆட்சியாளர்கள் பற்றியும் தைரியமாக சொல்லியிருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘கெவி’ மலைவாழ் மக்களின் அழுகை.

 

ரேட்டிங் 3/5