Feb 14, 2019 06:39 AM

‘கோகோ மாக்கோ’ விமர்சனம்

509c14de5a182d3ac0e4b6b92379ed32.jpg

Casting : Ramkumar, Chaams, Sarah, Dinesh, Dhanusha, YGM, Delhi Ganesh, Santhana Bharathy, Ajay Rathnam

Directed By : Arun Kanth

Music By : Arun Kanth

Produced By : Info Pluto Media Works

 

இண்டிபெண்டெண்ட் பிலிம் மேக்கரான அருண்காந்த் என்ற அறிமுக இயக்குநர் புதுமுகங்களை வைத்து இயக்கி தயாரித்திருக்கும் ‘கோகோ மாக்கோ’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

தனது இசை ஆல்பத்தை வெளியிடுவதற்காக பல வருடங்களாக, பல இசை நிறுவனங்களை அனுகிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளரான அருண்காந்த், தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக தயாரிக்க நினைக்கிறார். அதற்காக ரோட் ட்ரிப் செல்லும் நிஜ காதலர்களான ராம்குமார் - தனுஷா ஜோடியின் காதல் நடவடிக்கைகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை வீடியோ ஆல்பமாக தயாரிக்க முடிவு செய்கிறார். அதற்காக, ஒளிப்பதிவாளர் சாம்ஸை, காதல் ஜோடியுடன் பயணிக்கவும் வைக்கிறார்.

 

அதன்படி காதலர்களுடன் ரோட் ட்ரிப்புக்கு செல்லும் சாம்ஸ், காதலர்களின் நடவடிக்கைகளை அருண்காந்த் நினைத்தது போல படம் பிடித்தாரா இல்லையா, அருண்காந்தின் இசை ஆல்பம் வெளியானதா இல்லையா, என்பதை காமெடி பிளஸ் காதல் கலந்து சொல்லியிருப்பது தான் ‘கோகோ மாக்கோ’ படத்தின் கதை.

 

படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த், ஹீரோ ராம்குமார், ஹீரோயின் தனுஷா உள்ளிட்ட படத்தில் நடித்திருப்பவர்களும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் புதியவர்கள் மட்டும் இன்றி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்கள், என்பது படம் பார்க்கும் போதே தெரிகிறது.

 

ஹீரோவாக புயல் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ராம்குமார், அவரது காதலியான நிலா என்ற வேடத்தில் நடித்திருக்கும் தனுஷா அவர்களை பின் தொடரும் சாம்ஸ் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரது காட்சிகள் சில நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. அதேபோல், இசை நிறுவனத்தில் பணிபுரியும் வினோத் வர்மா மற்றும் சாரா ஆகியோரின் நடிப்பும், டெல்லி கணேஷ் மற்றும் அஜய் ரத்தினத்தின் அனுபவம் வாய்ந்த நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

 

தங்களுக்கு கிடைத்த குறைந்த வசதிகளை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கும் இக்குழுவினர், அதில் சில வித்தியாசமான பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஒரு திரைப்படத்திற்கு கதையும், திரைக்கதையும் எவ்வளவு முக்கியமோ அதுபோல் தரம் என்பதும் முக்கியம் என்பதை புரிந்து எதிர்காலத்தில் சினிமாவில் பயணித்தால் நல்லது.

 

இந்த படத்தை இயக்கியதோடு மட்டும் இன்றி தயாரித்து, இசையமைத்து மேலும் சில பணிகளை மேற்கொண்டிருக்கும் அருண்காந்த், விஷயம் தெரிந்தவர் என்பது அவர் திரைக்கதை அமைத்த விதத்திலே தெரிகிறது. தான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருப்பவர் தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு படத்தை சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். அதே சமயம், தொழில்நுட்ப ரீதியாக படத்தில் சில குறைபாடுகள் இருப்பதையும் மறுக்க முடியாது.

 

கதைப்படி, காதலர்களுக்கு தெரியாமலேயே அவர்களது நடவடிக்கைகளை படம்பிடிக்க வேண்டும் என்பதால், முழு படத்தையுமே கோப்ரோ கேமரா மூலம் படமாக்கிய அருண்காந்தின் யுக்தியையும், முயற்சியையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

நல்ல தயாரிப்பாளர் மற்றும் பட்ஜெட் கிடைத்தால், தரமான கமர்ஷியல் படத்தை தன்னாலும் தர முடியும், என்பதை இப்படத்தின் பல இடங்களில் இயக்குநர் அருண்காந்த் நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘கோகோ மாக்கோ’ வித்தியாசமான முயற்சியாகவும், வரவேற்கத்தக்க படமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5