Oct 02, 2025 08:49 AM

‘இட்லி கடை’ திரைப்பட விமர்சனம்

fe0664cac4aa79d8f388b678858c0763.jpg

Casting : Dhanush, Nithya Menon, Arun Vijay, Shalini Pandey, Sathyaraj, Rajkiran, Parthiban, Samuthirakani , Ilavarasu

Directed By : Dhanush

Music By : G.V Prakash Kumar

Produced By : Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd - Aakash Baskaran & Dhanush

 

தேனி மாவட்ட கிராமத்தை சேர்ந்த தனுஷ், படித்து விட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார். அங்கு நல்ல வேலை கிடைப்பதோடு, தன் முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதற்கிடையே தந்தை இறந்ததால் தனது கிராமத்துக்கு வரும் தனுஷ், மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல முடியாத சூழல் உருவாவதோடு, தனது தந்தை ஆரம்பித்த இட்லி கடையை தொடர்ந்து நடத்த முடிவு செய்கிறார். ஆனால், அதை செய்ய விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘இட்லி கடை’.

 

வெளிநாட்டில் கோட் சூட் போட்டு கம்பீரமாக வரும் தனுஷ், கிராமத்தில் வேட்டி சட்டை, தோளில் துண்டு, நெற்றியில் விபூதி என்று எளிமையின் மறு உருவமாக வலம் வருகிறார். இரண்டு கெட்டப்புகளிலும் அவ்வபோது மாஸ் காட்டி ரசிகர்களை மகிழ்விப்பவர், பல உணர்வுப்பூர்வமான விசயங்களை தனது நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் பதிய வைத்து களங்க வைத்து விடுகிறார். 

 

தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் ராஜ்கிரண், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். அவர் மூலம் சொல்லப்படும் அத்தனை கருத்துகளும் நிச்சயம் மக்களை யோசிக்க வைக்கும்.

 

நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், உருவத்தில் மட்டும் இன்றி எதார்த்தமான நடிப்பின் மூலமாகவும் தன்னை கிராமத்து பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஷாலிணி பாண்டேவின் நடிப்பிலும் குறையில்லை.

 

தொழிலதிபராக நடித்திருக்கும் சத்யராஜ், தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் அளவான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

சத்யராஜின் மகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தனுஷின் வில்லனாக மிரட்டியிருக்கிறார். தனது பழிவாங்கும் உணர்வை அசத்தலான நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், தனுஷுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

 

பார்த்திபன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் தாங்கள் ஏற்றுக்கொண்ட வேடத்திற்கு நியாயம் சேர்த்திருப்பதோடு, அவ்வபோது சிரிக்கவும் வைக்கிறார்கள். 

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் கிராமத்தையும், வெளிநாட்டையும் ரசிக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னாவின் பணியிலும் குறையில்லை.

 

நாயகன் மட்டும் இன்றி எழுதி இயக்கவும் செய்திருக்கும் தனுஷ், ஒரு இட்லி கடையை வைத்துக் கொண்டு மனிதர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். எத்தனை நாட்டுக்கு சென்று, எவ்வளவு பொருள் தேடினாலும், நம் சொந்த மண் மற்றும் மக்களுடன் பயணிக்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது, என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

 

அகிம்சையே சிறந்த ஆயுதம், பெற்றவர்களை உடன் இருந்து பார்த்துக் கொள்ளாத பிள்ளைகள் பொறுப்பற்றவர்களே உள்ளிட்ட பல விசயங்களை சொல்லி மக்களின் மனதை உலுக்கியிருக்கும் இயக்குநர் தனுஷ், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை மகிழ்வித்து, களங்க வைத்து யோசிக்கவும் வைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘இட்லி கடை’ மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

 

ரேட்டிங் 4.5 / 5