Oct 15, 2021 04:42 AM

’இன்ஷா அல்லாஹ்’ விமர்சனம்

996c008709e209c04cbaf2bd0ab90e77.jpg

Casting : Poet Vikramadhithan, bhagavathi Ammal, Abdul Salam, Naren Balaji

Directed By : Seerkatchi Pakkil Pandiyan Baskaran

Music By : Seerkatchi Pakkil Pandiyan Baskaran

Produced By : Nesam Entertainment Praivate Ltd.

 

இஸ்லாமியர்கள் ஐந்து கடமைகளை தங்களது வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க வேண்டும். கடைமைகளை தவறாமல் நிறைவேற்றுபவர்கள் இறப்பிற்கு பின்னாள் சொர்க்கத்துக்கும், நிறைவேற்றாதவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள், என்பதனை விளக்குவது தான் ‘இன்ஷா அல்லாஹ்’ படத்தின் கதை.

 

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான ஐந்து கடமைகள் என்பது, அவர்களுக்கு மட்டும் இன்றி மற்ற மதத்தினருக்கும் நன்கு தெரிந்த ஒன்று தான் என்றாலும், அதனை நிறைவேற்றாமல் போகிறவர்கள் எப்படிப்பட்ட இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்பதை இயக்குநர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன், அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதே சமயம், காட்சிகளை தெளிவில்லாமல் நகர்த்தியிருப்பது படம் பார்ப்பவர்களை குழப்பமடையவும் செய்கிறது.

 

படத்தில் ஏகப்பட்ட குறியீடுகளை வைத்திருக்கும் இயக்குநர், காட்சிகளை மிக நீளமாகவும் கையாள்கிறார். உலக சினிமாக்களில் இதுபோன்ற யுக்தி கையாளப்படுவது வழக்கம் தான் என்றாலும், அந்த நீளமான சில காட்சியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் போவது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.

 

அதே சமயம், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள், அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை, என்பதை நெற்றி பொட்டில் அடித்து சொல்லியிருக்கும் இயக்குநர், ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றாமல் இருப்பது, நீதி கேட்டு போராடும் இஸ்லாமியர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்வது, மாட்டுக்கறி பிரச்சனை என்று சமூகப் பிரச்சனைகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் மறைமுகமாகவும், நேரடியாகவும் பேசியிருக்கிறார்.

 

இஸ்லாமியர்கள் அனைத்து மதத்தினருடனும் சகோதர உறவோடு பழகுபவர்கள், ஒற்றுமையாக இருப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது, என்பதை விளக்கும் வகையிலும் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

 

படத்தில் நடித்தவர்களில் விஞர் விக்கிரமாதித்யன் மட்டும் பார்த்த முகம். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் எதார்த்தமாக இருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கதாநாயகனின் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் இளம் பெண், கணவனுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியில், கவனம் ஈர்க்கிறார்.

 

நடிகர்கள் மட்டும் இன்றி ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இயல்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னா கதைக்கு ஏற்றவாறு கேமராவை பயன்படுத்தியிருந்தாலும், சில காட்சிகளில் கேமரா கோணங்கள் மூலம் தனது பணியை முன்னிறுத்த முயன்றிருக்கிறார்.

 

தோப்பில் முகம்மது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன் ஆகியோரின் கதைக்கு திரைக்கதை எழுதி சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். படத்தின் கதை எளிதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பது படத்தின் மிகப்பெரிய குறை என்றாலும், திரும்ப திரும்ப பார்த்தால் இயக்குநர் படத்தில் வைத்திருக்கும் குறியீடுகள், பேசியிருக்கும் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.

 

ரேட்டிங் 2/5