Jul 17, 2025 08:08 PM

‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்பட விமர்சனம்

55c0425a7dcf3b5437a5bc4c68187854.jpg

Casting : Taman Aakshan, Malvi Malhotra, Maithreya, Raksha Cherin, Sivam, Arun Karthi, Kali Venkat, Munishkanth, Velaramamoorthy, Thalaivasal Vijay, Santhana Bharathi , Nakalites Niveditha, Yasar

Directed By : B.Manivarman

Music By : Sanjay Manickam

Produced By : Amohom studios, Whitelamp Pictures - Subhashini.K

 

நாயகன் தமனின் மனைவி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதோடு, சில பயங்கரமான உருவங்களும் கனவில் வந்து போகிறது. 

 

பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருக்கும் காளி வெங்கட், அந்த தகவலை தமனின் நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு உயிருக்கு போராடும் தனது பெண் குழந்தையை காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்து போகிறார். 

 

பணத்தை எடுப்பதற்காக தமன், மால்வி மல்ஹோத்ரா மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்ல, மால்வி மல்ஹோத்ரா தன் கனவில் பார்க்கும் பயங்கரமான உருவங்களை அந்த இடத்தில் பார்க்கிறார். அதே சமயம்,  பணத்தை தேடும் தமன் அந்த இடத்தில் சாத்தான் வழிபாட்டு முறைகளுக்கான தடயங்களை கண்டுபிடிக்க, பணத்தை தேடும் அவரது நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள். அவர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு?, இவை அனைத்தும் எதனால் நடக்கிறது?, என்பதை சொல்வது தான் ’ஜென்ம நட்சத்திரம்’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் தமன், அவரது மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். கெட்ட கனவுகளால் எப்போதும் பயந்தபடியே காணும் மால்வி மல்ஹோத்ராவும், அமானுஷ்ய சம்பவங்களை தைரியமாக எதிர்கொண்டு உண்மையை கண்டுபிடிக்கும் தமனும், படத்தை தோளில் சுமந்திருக்கிறார்கள்.

 

தமனின் நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா மற்றும் அவரது காதலியாக நடித்திருக்கும் ரக்‌ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள். 

 

காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள். 

 

தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் என ஒரு சில காட்சிகளில் முகம் காட்டியிருப்பவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.ஜி, பாழடைந்த தொழிற்சாலையையும், அதில் நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்கள் மிரளும் வகையில் படமாக்கியிருக்கிறார். 

 

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் கதைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார். திகில் காட்சிகளில் பார்வையாளர்களின் பயத்தை பின்னணி இசை அதிகரிக்கச் செய்கிறது.

 

படத்தொகுப்பாளர் எஸ்.குரு சூர்யா, இயக்குநர் சொல்ல வந்த அமானுஷ்ய நம்பிக்கை பற்றிய கதையை, பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படும் வகையில் சொல்லியிருக்கிறார். 

 

சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக இயக்குநர் பி.மணிவர்மன் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

 

மனிதர்கள் உருவத்தில் கடவுளை பார்ப்பது போல், சாத்தானையும், அதன் செயலையும், மனிதர்கள் உருவத்திலும், அவர்களது செயலிலும் வெளிக்காட்டியிருக்கும் இயக்குநர் பி.மணிவர்மன், அதை சரியான முறையில் சொல்ல தவறியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ஜென்ம நட்சத்திரம்’ சாதிக்காத சாத்தான்.

 

ரேட்டிங் 2.5/5