Dec 23, 2023 06:16 AM

’ஜிகிரி தோஸ்த்’ திரைப்பட விமர்சனம்

c908761f68bb9a5bb3a6fba8f3eb6da5.jpg

Casting : Shariq, Aran V, VJAshiq, Punlic Star Durai Sudhakar, Ammu Abhirami, Pavithra Lakshmi, Sivam, KPY Sarath

Directed By : Aran V

Music By : Ashwin Vinayagamoorthy

Produced By : Lords P International & VVK Entertainment - Pradeep Jose.K & Aran.V

 

பொறியியல் மாணவர்களான ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்கும்படியான ஒரு சாதனத்தை அரன் உருவாக்குகிறார். ஆனால், அவருடைய கண்டுபிடிப்பு சரியாக வேலை செய்யாததால் கல்லூரி நிர்வாகத்தினால் நிராகரிக்கப்படுகிறது. இதற்கிடையே, மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் கடத்தப்பட, தான் கண்டுபிடித்த சாதனத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை காப்பாற்ற அரன் முடிவு செய்கிறார். அவருடன் மற்ற இரண்டு நண்பர்களும் களத்தில் இறங்க, அந்த சாதனம் சரியாக வேலை செய்ததா?, நண்பர்கள் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பு மாணவர் பருவத்தைப் போலவே இருப்பதால், இன்னும் பயிற்சி தேவை. ஷாரிக் ஹசனின் காதலியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி ஆகியோரின் நடிப்பில் குறையில்லை. சிவம், கே.பி.ஒய்.சரத் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதை நகர்த்தலுக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

வில்லனாக அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் வேடமும், அவருடைய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. வில்லத்தனத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகர், பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். அதிலும், கிளைமாக்ஸ் காட்சியில் காவல்துறை அவரை கைது செய்யும் போது, “நான் அமைச்சர்” என்று அவர் சொல்ல, அதற்கு அந்த காவலரின் பதிலடி, ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைத்துவிடுகிறது.

 

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தும் வகையில் பயணித்திருக்கிறது. பல இடங்களில் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அரன், கதை எழுதி இயக்கியிருக்கிறார். கல்லூரி காலக்கட்டத்தில் நண்பர்கள் செய்யும் அரட்டை, காதல், நகைச்சுவை ஆகியவற்றின் மூலம் முதல்பாதி படத்தை ஜாலியாக நகர்த்துபவர், இரண்டாம் பாதியில் வேறு ஒரு பாதையில் கதையை பயணிக்க வைத்து ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கிறார்.

 

ரசிகர்களின் பல்ஸுக்கு ஏற்றபடியான ஒரு கருவை உருவாக்கி, அதற்கு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதை கையாண்ட  விதத்தில் இயக்குநர் அரன், சில தவறுகளை செய்திருக்கிறார். அந்த தவறுகள் படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது. இருந்தாலும், இப்படி ஒரு பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் அரனின் முயற்சியை தாராளமாக வரவேற்கலாம்.

 

ரேட்டிங் 2.8/5