Aug 27, 2022 06:20 PM

‘ஜான் ஆகிய நான்’ திரைப்பட விமர்சனம்

f2ae1647be5e7e096594926f713bec76.jpg

Casting : Appu K.Samy, Arul Anbazhagan, Nizhalgal Ravi, Power Star Srinivasan, Aadhesh Bala, Nakshathra

Directed By : Appu K.Samy

Music By : 311Studios

Produced By : Dark Light Production - Subramanian S

 

டார்க் லைட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன்.எஸ் தயாரிப்பில், அப்பு கே.சாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘ஜான் ஆகிய நான்’. 311 OTT மற்றும் 311channel.com என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

 

ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாத அந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அந்த கிராமத்தை சேர்ந்த அருள் அன்பழகன் விவரிக்கிறார். எதற்காக 44 பேர் கொல்லப்பட்டார்கள்?, கொலை செய்யப்பட்டவர்கள் யார்?, கொலை செய்தது யார்? போன்ற கேள்விகளுக்கு அருள் அன்பழகன் கொடுக்கும் பதில்கள் உண்மையா? என்பதை ஆராயாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதோடு, அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கம் கேட்கிறது.

 

ஆனால், அன்பழகன் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை தெரிந்துக்கொள்ளும் அப்பு கே.சாமி, களத்தில் இறங்கி கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? என்பதை வித்தியாசமான முறையில் விவரிப்பது தான் ‘ஜான் ஆகிய நான்’.

 

ரிகவரி பாண்டி மற்றும் ஜான் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ரிகவரி பாண்டியாக காமெடி, காதல் என அனைத்து ஏரியாவிலும் அளப்பரை செய்திருப்பவர், ஜான் என்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

 

டச்சு பாண்டி என்ற வேடத்தில் நடித்திருக்கும் அருள் அன்பழகன் ஆரம்பத்தில் அப்பாவியாக தொலைக்காட்சியில் பேசிவிட்டு, பிறகு தனது விஸ்வரூபத்தை காட்டும் போது அதிர்ச்சியளிக்கிறது.

 

அவ்வபோது காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் சீனிவாசன் மொக்கை போடுகிறார். இரண்டு காட்சிகளில் மட்டுமே அவர் வருவதால் ரசிகர்கள் தலை தப்பித்தது.

 

நாயகியாக நடித்திருக்கும் நக்‌ஷத்ரா, பக்கத்து வீட்டு பெண்ணாக எளிமையாக இருக்கிறார். ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்னவோ ஐயோ பாவம் ரகம் தான்.

 

ராஜநாயகம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக்சன் பாபு, காமெடி வில்லனாக சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் தனது இயல்பான வில்லத்தனத்தால் கவனிக்க வைக்கிறார்.

 

மருத்துவராக வரும் நிழல்கள் ரவி, ஒரு காட்சியில் வந்தாலும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஜான் என்ற தொழிலதிபராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா அனுபவ நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நிழக்கள் ரவி, ஆதேஷ் பாலா ஆகியோரை தவிர படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களாக இருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவுக்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

 

கவியரசனின் ஒளிப்பதிவு மற்றும் 311 ஸ்டுடியோஸின் இசை, படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, வழக்கமான பழிவாங்கும் கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் சொல்லிய விதம் வித்தியாசமாக இருப்பதை விட புரியாதபடி இருப்பது தான் பெரும் சோகம். 

 

சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதையும், ஊடகங்களில் வெளியாகும் பொய் எப்படி உண்மையாகிறது என்பதையும் மிக அழுத்தமாக சொல்லியிருப்பதோடு, சமூக அக்கறையோடு வசனங்கள் எழுதியிருக்கும்  இயக்குநர் அப்பு கே.சாமி, அதை தெளிவாக சொல்லாமல் ரசிகர்கள் தலைதெறிக்க ஓடும் வகையில் சொல்லியிருக்கிறார்.

 

வித்தியாசமான முயற்சி என்று கூறி, தனக்கு மட்டுமே புரியும்படி படம் எடுத்திருக்கும் இயக்குநர் அப்பு கே.சாமி, அடுத்த முறையாவது அனைவருக்கும் புரியும்படியான ஒரு படத்தை எடுப்பார் என்று நம்புவோம்.

 

மொத்தத்தில், ‘ஜான் ஆகிய நான்’ புரியாத புதிர்.

 

ரேட்டிங் 2.5/5

 

குறிப்பு : 311 மொபைல் ஆப் மற்றும் 311channel.com இணையத்தில்,  Free purchase coupon code : 5555 என்ற எண்ணை பயன்படுத்தி ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம்.