Jul 27, 2022 08:56 AM

’ஜோதி’ விமர்சனம்

1cac2fd2a737b74f924fc0f55aa5e691.jpg

Casting : Vetri, Sheela Rajkumar, Kumaravel, Mime Gopi, Saravanan, Krisha Grup

Directed By : AV Krishna Paramadma

Music By : Harshavardan Rameshwar

Produced By : SP Raja Sethupathi

 

நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு பிரசவம் ஆக நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அவருடைய வயிற்றை கிழித்து குழந்தை கடத்தப்படுகிறது. குழந்தையை கடத்தியது யார்?,  எதற்காக கடத்தினார்கள்? ஆகிய கேள்விகளுக்களுக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்களுடன் பதிலளிப்பது தான் ‘ஜோதி’-யின் கதை.

 

குழந்தை கடத்தல் பயங்கரத்தின் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் உருவாகியிருக்கும்  இப்படம் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகவும் பயணித்திருப்பது படத்தின் கூடுதல் பலம்.

 

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வெற்றி கதையின் நாயகனாக தனக்கு கொடுத்த பணியை முழுமையாக செய்திருந்தாலும், சில இடங்களில் தடுமாறவும் செய்திருக்கிறார். எப்போதும் பாவப்பட்ட முகத்துடனே இருக்கும் அவரிடம் போலீஸுக்கான கம்பீரம் இல்லாமல் போனது அவரது கதாப்பாத்திரத்திற்கு பலவீனத்தை கொடுக்கிறது. வழக்கு விசாரணையின் போது இயல்பான உடல் மொழி மற்றும் நடிப்பு மூலம் சில இடங்களில் கவர்ந்தாலும், பல இடங்களில் காட்சிகளின் வேகத்தை வெற்றியின் தடுமாற்றமான நடிப்பு குறைத்துவிடுகிறது.

 

ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், குறிப்பிட்ட சில காட்சிகள் வந்தாலும், மொத்த படத்தின் பலமாக இருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு, படத்தில் இருக்கும் சில சிறிய குறைகளை கூட மறந்து போக செய்துவிடுகிறது.

 

ஜோதியின் கணவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ராட்சசன் சரவணன் மருத்துவராக நடித்திருக்கிறார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ஜோதி கதாப்பாத்திரத்திற்கு இணையாக பலம் வாய்ந்த வேடமாக இருக்கிறது. ஆனால், அந்த வேடத்தின் பலத்தை எந்த இடத்திலும் நடிகராக சரவணன் காட்டாதது ஏமாற்றம்.

 

போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் குமரவேல் கதாப்பாத்திரம் பல இடங்களில் வெற்றியை ஓவர் டேக் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கொடுக்கும் பல யோசனைகள் மூலம் விசாரணை சூடு பிடிக்கிறது. வேடத்தை போலவே நடிப்பிலும் வெற்றியை பல இடங்களில் ஓவர் டேக் செய்திருக்கிறார் குமரவேல்.

 

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் அவரது நடிப்பு அப்ளாஷ் பெறுகிறது.

 

மைம் கோபி, சாய் பிரியங்கா ருத், கிரிஷா குரூப் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் செசி ஜெயா கதைக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். அனைத்து காட்சிகளையும் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கியிருப்பது கதையோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறது. இருப்பினும், தேவையில்லாத இடங்களில் அடிக்கடி வரும் ஏரியல் ஷாட்களை தவிர்த்திருக்கலாம்.

 

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படங்களுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையை கொடுத்து காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறார்.

 

சத்ய மூர்த்தியின் படத்தொகுப்பு மிக நேர்த்தி. திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் வேகம் குறையாமலும், அதே சமயம் இயக்குநர் சொல்ல நினைத்ததை ரசிகர்களிடம் கச்சிதமாக கொண்டு சேர்க்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

 

குழந்தை கடத்தல் சம்பவங்கள் பல நடந்தாலும் அதன் பின்னணியில் இருக்கும் பயங்கரம் மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா, மருத்துவத்துறையில் இருப்பவர்களும் இந்த குற்ற செயலில்  ஈடுபடுகிறார்கள், என்பதை மிக தைரியமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

குழந்தை கடத்தலை மையப்படுத்திய கதை என்றாலும் அதை திரை மொழியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்தை முழுமையாக ரசிக்க வைகிறது.

 

மொத்தத்தில், ‘ஜோதி’-யின் பிரகாசம் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைக்கும்.

 

ரேட்டிங் 3.5/5