Aug 13, 2022 03:45 AM

’கடமையை செய்’ திரைப்பட விமர்சனம்

3446007f15586d0b4cc65902aab3592d.jpg

Casting : SJ Surya, Yashika Anand, Vincent Ashokan, Charles Vinoth, Sesu, Rajendran

Directed By : Venkat Raghavan

Music By : Arun Raj

Produced By : Syed Zahir Hussain, TR Ramesh

 

கட்டுமான பொறியாளரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு திடீரென்று வேலை போய்விடுகிறது. மனைவி, குழந்தையை காப்பாற்றுவதற்காக கிடைத்த வேலையை செய்ய முடிவு செய்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலைக்கு சேருகிறார். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு ஆபத்து இருப்பதை எஸ்.ஜே.சூர்யா அறிந்துக்கொண்டு அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் போது விபத்தில் சிக்கி படுத்தப்படுக்கையாகி விடுகிறார். 

 

எழுந்து நடக்க முடியாது, வாய் பேச முடியாத நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, அந்த நிலையிலும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை காப்பாற்ற துடிக்கிறார். அவர்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாக வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். நடுத்தர குடும்ப தலைவனாக பொறுப்பாக நடித்திருபவர், விபத்தில் சிக்கி வித்தியாசமான நோயால் பாதிக்கப்படும் போது தனது உடல் அசைவுகள், நடை, முகபாவம் என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டி கவர்வது மட்டும் இன்றி தனது நடிப்பின் மூலம் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். கவர்ச்சி நடிகையாக இருந்த அவரை கதையின் நாயகியாக நடிக்க வைத்த இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார்.

 

சார்லஸ் வினோத்தின் வில்லத்தனம், அடியாள் ராஜசிம்மனின் அடங்க மறுக்கும் கழுத்து என்று ஆக்‌ஷன் ஏரியாவில் கூட காமெடியை வைத்து இயக்குநர் ரசிக்க வைத்திருக்கிறார்.

 

மொட்ட ராஜேந்திரன், வின்செண்ட் அசோகன், சேசு, ரேகா நாயர் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் வேங்கட் ராகவன் சிறு வேடத்தில் நடித்து நம்மை அவ்வபோது சிரிக்க வைத்திருக்கிறார்.

 

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. அருண் ராஜின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் போக்கை மாற்றாமல் பயணித்திருக்கிறது.

 

வித்தியாசமான கருவை கதைக்களமாக எடுத்துக்கொண்ட இயக்குநர் வேஙட் ராகவன், அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

நடக்கவும், பேசவும் முடியாத எஸ்.ஜே.சூர்யா அடுக்குமாடி குடியிருப்பு மக்களை எப்படி காப்பாற்ற போகிறார், என்ற எதிர்ப்பார்ப்போடு நகரும் படத்தில் அவ்வபோது காமெடி காட்சிகளை வைத்து சிரிக்க வைக்கும் இயக்குநர் வேங்கட் ராகவன் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஆபத்துகளை காட்டி அதிர வைக்கிறார்.

 

இயக்குநர் வேங்கட் ராகவனின் வித்தியாசமான முயற்சிக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, படத்தின் வெற்றிக்காக மிகப்பெரிய உழைப்பையும் கொடுத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

மொத்தத்தில், ‘கடமையை செய்’ நிச்சயம் பலன் தரும்.

 

ரேட்டிங் 3/5