Sep 09, 2022 01:46 PM

’கணம்’ திரைப்பட விமர்சனம்

5802809305e83a1afab11caa5ceb36a9.jpg

Casting : Sharvanand, Amala, Reethu Varma, Sathish, Ramesh Thilak, Nazar, Ravi Raghavendar

Directed By : Sri Karthik

Music By : Jakes Bejoy

Produced By : Dream Warier Pictures

ஷர்வானந்த், ரமேஷ் திலக், சதீஷ் மூன்று பேரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே இணைபிரியா நண்பர்களாக இருக்கிறார்கள். மூவருக்கும் பல ஆசைகளும், தேவைகளும் இருக்கிறது. ஆனால், அவைகளை அடைய முடியாத சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், டைம் மெஷினுடன் வரும் நாசர் மூன்று நண்பர்களையும் அவர்களது கடந்த காலத்துக்கு சென்று, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவி செய்கிறார்.

 

அதன்படி, மூன்று பேரும் தங்களது கடந்த காலத்துக்கு செல்கிறார்கள். ஷர்வானந்த் தன் சிறுவயதில் நடந்த அம்மாவின் மரணத்தை தடுக்க முயற்சிக்கிறார். அது நடந்ததா? இல்லையா? என்பதை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘கணம்.

 

டைம் மெஷினை வைத்து தமிழ் சினிமாவில் ஏற்கனவே சில படங்கள் வந்திருந்தாலும், அம்மா செண்டிமெண்டை மையப்படுத்திய இந்த கதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது.

 

பள்ளிப்பருவத்தில் இழந்த தனது அம்மாவை மீண்டும் சந்திக்கும் போது ஷர்வானந்த் வெளிப்படுத்தும் நடிப்பு நம்மை நெகிழ்ச்சியடைய செய்கிறது. அம்மாவின் பாசத்திற்காக ஏற்கும் காட்சிகளாகட்டும், அம்மாவை மீண்டும் இழந்துவிடுவோமோ என்று தவிக்கும் காட்சிகளாகட்டும் நடிப்பால் நம்மை கலங்க வைக்கிறார் ஷர்வானந்த்.

 

முதல் முறையாக அம்மா வேடத்தில் நடித்திருக்கும் அமலா, நிஜ அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி ரீத்து வர்மாவுக்கு குறைவான வேலை என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்.

 

சதீஷ், ரமேஷ் திலக் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருப்பதோடு, அவ்வபோது நம்மை சிரிக்கவும் வைக்கிறார்கள். விஞ்ஞானியாக நடித்திருக்கும் நாசர், அமலாவின் கணவராக நடித்திருக்கும் ரவிராகவேந்தர் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஜேக்ஸ் பிஜோயின் இசையில் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கு உயிர் அளித்துள்ளது.

 

சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை குழப்பம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒவ்வொரு காலக்கட்டத்தையும் வித்தியாசப்படுத்தியும் காட்டியிருக்கிறது.

 

அம்மா பாசம் கதையம்சம் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும், அதை வித்தியாசமான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்ரீகார்த்திக், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக இருந்தாலும், மனதை விட்டு நீங்கா இடம்பிடிக்கும் விதத்தில் அம்மா பாசத்தை அழகாகவும், ஆழமாகவும் சொல்லி இயக்குநர் ஸ்ரீகார்த்திக் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கணம்’ மனங்களை பாதிக்கும்.

 

ரேட்டிங் 4/5