Dec 19, 2022 09:59 AM

‘கட்சிக்காரன்’ திரைப்பட விமர்சனம்

312ebace0b6b09f04f9d91603de70951.jpg

Casting : Vijith Saravanan, Swetha Darathi, Appu Kutty, Sivasenathipathi, A.R.Thenali, Vijay Goutham, CN Prabhakaran,Vincent Rai, Kumara Vadivelu, Mayi Sundar, Ramesh Pandiyan

Directed By : Pa.Iyappan

Music By : Roshan Joseph and CM Mahendra

Produced By : Saravanan Selvaraj

 

வீடு மனைவி மக்கள் என்று பாராமல் கட்சி கட்சி என்று காலம் முழுக்க உழைத்து விட்டு அரசியல்வாதியின் நிஜமுகம் தெரியும்போது சலிப்படைந்து அரசியலில் இருந்து விலகி விடுவது பல உழைப்பாளி அரசியல் தொண்டர்களின் சோகக்கதை.

 

ஆனால் சலிப்படையாமல் சோர்வடையாமல்  என்றாவது ஒரு நாள் நமக்கும் ஒரு காலம் வரும் ,புதிய வழி கிடைக்கும்,வாழ்வில் ஒளி பிறக்கும் என்று கனவோடு காத்திருக்கும் தொண்டன் தான் கட்சிக்காரன் படத்தின் கதாநாயகன் சரவணன். வாழ்வில் நம் கண்ணெதிரே எதிர்ப்படும் கட்சித் தொண்டர்களில் ஒருவனாக அவனைப் பார்க்கலாம். அப்படி அந்த பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் படத்தின் நாயகன்  சரவணன், தனது அபிமானமிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான். போஸ்டர் ஒட்டுவது ,கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது ,கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான். இவற்றுக்கெல்லாம் செலவுக்குப் பணம் இல்லாத போது தன் மனைவியின் தாலியை அடகு வைக்கக் கூட தயங்குவதில்லை. இப்படி இரவு பகல்  பாராது உழைக்கிறான்.  அவனது உழைப்பைப் பாராட்டி அவனுக்குத் தேர்தலில் கவுன்சிலர் பதவியில் போட்டியிட வாய்ப்பு வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில்  எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது.

 

தன் கனவு சிதைந்து விட்டதே என்று எண்ணி ஏமாற்றப்பட்டவன் சோர்வடைந்து  விலகிவிடவில்லை. யோசித்துப் பார்த்தபோது  மெல்ல மெல்ல விழிப்புணர்வுபெறுகிறான். அவன் மனைவி அஞ்சலியும் அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். ஏமாற்றியவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிறாள்.

 

ஆகவே உண்மைத் தொண்டன் சரவணன் ஏமாற்றப்பட்ட தலைவனிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறான். அது மட்டுமல்ல தன்னைப் போல ஏமாற்றப்பட்டவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு போராடுகிறான். அரசியல்வாதிகளின் மிரட்டல் போக்கால், அவன் கூட வந்தவர்கள் இடையில் கழன்று கொண்டாலும் அவன் உறுதியாக நிற்கிறான். முடிவு என்ன என்பதுதான் கட்சிக்காரன் படத்தின் கதை.

 

இந்தக் கட்சிக்காரன் பாத்திரம் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டு வேறொன்று  போன்று தோன்றாது. நம் கண் முன்னே ஊருக்கு ஊர் தெருவில் கட்சிக்காகச்  சுற்றித் திரியும் அப்பாவித் தொண்டர்களை அந்தப் பாத்திரம் நினைவூட்டுகிறது.

 

அவர்களில் ஒருவன் தான் இந்த  சரவணன் என்று படம் பார்ப்பவர்களுக்குத தோன்றும். எனவே அந்தக் கதாபாத்திரத்துடன் நாம் எளிதாக நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் கிராமத்து மண்ணின் நிறத்தை எழுதி வைத்துள்ள அந்த அப்பாவி முகமும் வெள்ளந்தி குணமும்  அவரை அந்தப் பாத்திரத்தில் அழகாக பொருத்திக் கொள்கின்றன.

 

அவரது மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி  அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவியாக  சரியாகப் பொருந்துகிறார். நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார்.அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி. அளவான அழகு, நடிப்பு .

 

மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். கதாநாயகனின் நண்பனாக வரும் தெனாலியும் நீள வசனங்கள் பேசி தனது அங்க சேட்டைகள் மூலம் ஆங்காங்கே சிரிப்பையும் வரவழைக்கிறார்.

 

எதிலும் முதலீடு செய்யும் போது அதன் பலனை எதிர்பார்ப்பது நியாயம் தானே? வங்கியில், பங்குச்சந்தையில், நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து விட்டு வட்டியுடன் பெருகும் பணத்தை எதிர்பார்ப்பதில்லையா?

அது போலவே அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை வைத்து தொண்டர்கள்  உழைப்பை முதலீடு செய்கிறார்கள். அப்படி முதலீடு செய்யும் தொண்டனுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா ? என்று கேள்வி கேட்கிறது இந்தப் படம்.

 

அது மட்டுமல்ல இந்த அரசியல்வாதிகளின்  தொண்டர்கள்  மீதான அலட்சியத்தையும் ,மக்கள் விரோதப் போக்கையும், ஊழல்களில் கொடி கட்டிப்பறப்பதையும் , பணம் சம்பாதிக்க எதிரெதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையும் பல்வேறு வசனங்களின் மூலம் இப்படம் கேள்வி கேட்கிறது. விழிப்புணர்வு ஏற்படவும் வைக்கிறது.

 

பல பெரிய கதாநாயகர்கள் சொல்லத் தயங்கும் பல வசனங்கள் இதில் வருகின்றன.  ஏமாற்றப்படும் தொண்டர்கள் கேள்வி கேட்க வேண்டும். தங்கள் உழைப்பிற்கு நியாயம் கேட்க வேண்டும் என்று கூறுகிறது படம்.

 

படத்தில் இரண்டே இரண்டு பாடல் காட்சிகள் 'செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே' என்ற டூயட் பாடல் கிராமத்து அழகைக் கண் முன்னே கொண்டு வருகிறது. அதற்கான இசையும் பொருத்தம். இன்னொரு பாடலாக வரும் 'கட்சிக்காரன் கட்சிக்காரன் ' என்கிற பாடல் இவன்  கேள்வி கேட்கும் கட்சிக்காரன் என்று கூறுகிறது.

 

படத்திற்குப் பலம் துணிச்சலான  வசனங்கள் தான். ஆனால் வெறும் வசனங்களை மட்டும் வைத்து ஒரு படத்தை நிறைவு செய்துவிட முடியாது. படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று  பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வெறும் வாய் வார்த்தையாக பேசிக் கொண்டே இருப்பது தான் சலிப்பூட்டுகிறது .

 

அரசியல்வாதிகள் பற்றி மக்கள் மனதில் பதிந்திருக்கும் பல அபிப்ராயங்களை மாற்றும் வகையில் துணிச்சலான வசனங்களில் மூலம் சில உண்மைகளைப் போட்டு உடைக்கிறார்கள். அப்படிச் சொல்ல வந்த கருத்துக்காக இந்த முயற்சியை  ஆதரிக்கலாம். காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.

 

மொத்தத்தில், ‘கட்சிக்காரன்’ கரவேட்டிக்காரர்களுக்கு சாட்டையடி

 

ரேட்டிங் 3/5