’கிஸ்’ திரைப்பட விமர்சனம்

Casting : Kavin, Preethi Asrani, Prabhu, VTV Ganesh, RJ Vijay, Rao Ramesh, Devayani, Sakthi Raj
Directed By : Sathish Krishnan
Music By : Jen Martin
Produced By : Romeo Pictures - Raahul
காதல் பிடிக்காத நயகன் கவினுக்கு, காதல் ஜோடிகள் முத்தம் கொடுப்பதை பார்த்துவிட்டால், அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆற்றல் கிடைக்கிறது. இதனால், காதலர்கள் முத்தமிடுவதை பார்க்கும் போது அவர்களது எதிர்காலத்தை அறிந்து, அவர்களை பிரிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையே நாயகி ப்ரீத்தி அஸ்ரானியுடன் நட்பாக பழகும் கவினுக்கு அவர் மீது காதல் மலர்கிறது. ப்ரீத்திக்கும் கவின் மீது காதல் மலர்கிறது. இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில், ப்ரீத்தி திடீரென்று கவினுக்கு முத்தக் கொடுத்து விடுகிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது, என்பதை அறிந்துக் கொள்ளும் கவின், அவரை நிராகரிக்கத் தொடங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? , இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ?, கவினின் இந்த விசித்திர ஆற்றலின் பின்னணி என்ன ? என்பதை கலர்புல்லான காதலோடு சொல்ல முயற்சித்திருப்பதே ‘கிஸ்’.
காதலை வெறுப்பவராகவும், காதலர்களுக்கு எதிராக செயல்படுபவராகவும் இருந்து பிறகு அதே காதலுக்காக உருகும் காட்சிகளில் கவின் நன்றாகவே நடித்திருக்கிறார். காதலர்களை பிரிக்கும் போதும் சரி, காதலுக்காக ஏங்கும் போதும் சரி, பலவித எக்ஸ்பிரசன்களை சேர்த்து நடிப்பில் வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருப்பவர், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, இளமை ததும்ப ததும்ப வலம் வருகிறார். நடிக்க கூடிய வாய்ப்புள்ள கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்து பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதில் வென்றிருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய் மற்றும் அவரது தந்தையாக நடித்திருக்கும் விடிவி கணேஷ், காமெடி ஏரியாவை தங்கள் வசம் வைத்துக்கொண்டு பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் இவர்களது டைமிங் எடுபடவில்லை என்றாலும், இரண்டாம் பாதி படத்தை தாங்கிப் பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவயானி, பொருந்தாத உடை மற்றும் லுக்கில் உறுத்தலாக வந்து போகிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரபு, கெளசல்யா ஆகியோரது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களில் இருக்கும் இளமையை காட்சிகளிலும் பிரதிபலிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறது.
ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தனி கவனம் பெறவில்லை என்றாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு பாதகம் இல்லாமல் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரனாவ், வித்தியாசமான கதைக்களத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் முதல் பாதியில் திணறினாலும், இரண்டாம் பாதியில் பார்வையாளர்களுக்கு பிடித்ததை சரியான முறையில் தொகுத்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.
இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன், இளைஞர்களுக்கான படமாக கொடுக்கும் முயற்சியில், முத்தத்தை வைத்து பெரும் காதல் யுத்தம் நடத்தியிருக்கிறார்.
காதல் பிடிக்கா நாயகன் காதலர்களை பிரிக்கும் வேலையை செய்வது சில படங்களில் ஏற்கனவே பார்த்திருப்பதால், முதல்பாதி படம் சற்று தொய்வாக நகர்ந்தாலும், நாயகனுக்கு காதல் பிறந்துவிட்ட போது ஏற்படும் மாற்றமும், அதன் மூலம் நிகழும் சம்பவங்களை காமெடியோடு சேர்த்து சொல்லும் போது வரும் சிரிப்பால் சோர்வு விலகி படத்தை ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில், ‘கிஸ்’ காதல் யுத்தத்தால் வரும் சிரிப்பு சத்தம்.
ரேட்டிங் 3/5