’கொம்புசீவி’ திரைப்பட விமர்சனம்
Casting : Shanmuga Pandian Vijayakant, R. Sarathkumar, Tharnika, Kaali Venkat, Kalki Raja, Gorge Maryan, VJ Aishwarya, Rams
Directed By : Ponram
Music By :
Produced By : Star Cinemas - Mukesh T. Chelliah
வைகை அணை கட்டும் போது சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த கிராம மக்கள் வேறு ஒரு இடத்திற்கு குடியமர்த்தப்படுகிறர்கள். ஆனால், அங்கு விவசாயம் செய்வதற்கான வசதிகள் இல்லாததால், அணையின் நீர் மட்டம் குறைந்து, அவர்களது நிலம் தெரியும் போது அவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் போது, வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். தங்கள் பிழைப்புக்காக சிலர் சில தவறான வேலைகளை செய்கிறார்கள். அப்படி செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறார் சரத்குமார். அவரும் அவ்வபோது சில தவறான செயல்களில் ஈடுபட்டாலும், அனைத்தும் ஊர் மக்களுக்காகவே என்பதால், அவரை தலைவராகவே ஊர் மக்கள் பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, இதே பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, அதன் காரணமாக தனது பெற்றோரையும் இழந்த சண்முக பாண்டியன், சிறு வயதில் சரத்குமாருடன் வேலைக்கு சேர்ந்து அவரைப் போலவே தவறான செயல்களில் ஈடுபடுகிறார். பணம் இல்லாததால் தனது பெற்றோரை இழந்ததால், அதே பணத்தை அதிகமாக சம்பாதித்து, பண மெத்தையில் படுக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறார். அவரது ஆசையை நிறைவேற்றும் ஆசானாக மட்டும் இன்றி மாமனாகவும், அவருடன் வலம் வரும் சரத்குமார், அவரது ஆசையை நிறைவேற்றினரா ? , நாலு பேரு நல்லா இருக்கனும்னா...எதுவும் தப்பில்ல, என்ற பாணியில் தப்பு செய்யும் அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா ? என்பது தான் ‘கொம்புசீவி’ படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருந்தாலும், உடல் மொழியில் அதை வெளிக்காட்ட முடியாமல் திணறுவது பல இடங்களில் தெரிகிறது. இருந்தாலும் தன்னால் முடிந்தவரை சமாளித்து நடித்திருக்கிறார்.
தோற்றம் ரீதியாக வித்தியாசத்தை காட்டுவதற்காக தலைமுடி மற்றும் தாடி முழுவதும் நரைத்த, தாத்தா போன்ற ஒரு கெட்டப்பில் மாமனாக நடித்திருக்கும் சரத்குமார், நாயகனுக்கு இணையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட நாயகனை காட்டிலும் ஒரு படி அதிகமாகவே நடித்திருக்கிறார். சரத்குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்காகவும், எடுப்பாகவும் இருக்கிறார். புடவையில் கூடுதல் கவனம் ஈர்ப்பவர், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், ரசிகர்களை கிரங்கடித்து விடுவார் என்பது தெரிகிறது. நடிப்பு பரவாயில்லை.
காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா ஆகியோர் பார்வையாளர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். சில இடங்களில் சிரிப்பு வந்தாலும் பல இடங்களில், அவர்களது காமெடி கடியாய் கடித்து கொள்ளுகிறது.
காவல்துறை அதிகாரியாக சிறிய வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை என்பது டைடில கார்டில் மட்டுமே தெரிகிறதே தவிர, பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெரியவில்லை. குறிப்பாக இளையராஜா பாடிய பாடலும் நினைவில் நிற்காமல் சட்டென்று ஒலித்து மறைந்து விடுகிறது.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் படம் குழுவதும் பளிச்சென்று கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளாக காட்டப்படும் பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் அழகோ அழகு.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், வழக்கமான கமர்ஷியல் ஃபார்மட் திரைக்கதையாக இருந்தாலும், தன்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், வழக்கமான பாணியில் தொடர்ந்து படங்களை கொடுத்தாலும், காமெடி என்ற தனது தனித்துவமான பலம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து விடுவார். ஆனால், இந்த படத்தில் அவரது பலம் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
சண்முக பாண்டியனுக்காக திரைக்கதையில் ஆக்ஷனை தூக்கலாக எழுதியிருக்கும் இயக்குநர் பொன்ராம், ஒரு கட்டத்தில் சண்முக பாண்டியனை காட்டிலும் சரத்குமார மீது அதீத நம்பிக்கை வைத்து காட்சிகளை வடிவமைத்திருப்பது தெரிகிறது. அது தான் படத்தையும் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது.
மக்களுக்காக செய்தாலும் முக்கிய கதாபாத்திரங்களின் செயல் குற்றமே, என்பதை அடிக்கோடிட்டு காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும், ஐந்து கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு காட்டிக்கொடுக்கும் காட்சி அதரபழசாக இருப்பதோடு, பலருக்கு நன்மை பயக்கும் அணையாக இருந்தாலும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்யாமல், வழக்கமான கமர்ஷியல் பாணியிலான படமாக மட்டுமே பயணிக்கிறது.
மொத்தத்தில், ‘கொம்புசீவி’ கூர்மை இல்லை.
ரேட்டிங் 2.7/5

