May 07, 2022 04:20 AM

’கூகுள் குட்டப்பா’ விமர்சனம்

af4dfd0aefcd14533f1a4acb2766ab15.jpg

Casting : KS Ravikumar, Dharshan, Loslya, Yogi Babu, Black Pandi, Raghul, Pavithra

Directed By : Sabari - Saravanan

Music By : Ghibran

Produced By : KS Ravikumar

 

ஜெர்மனியில் உள்ள ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேருகிறார் தர்ஷன். ஊரில் தனியாக இருக்கும் தனது அப்பா கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துக்கொள்ள வேலைக்கு வரும் ஆட்கள் அவருடைய டார்ச்சர் தாங்காமல் ஓடிவிட, தனது அப்பாவுக்கு உதவியாக தனது நிறுவனம் தயாரித்த ரோபோவை பயன்படுத்த தர்ஷன் முடிவு செய்கிறார். அதன்படி, ஜெர்மனியில் இருந்து ரோபோ ஒன்றை எடுத்து வந்து தனது அப்பாவுக்கு அவர் கொடுக்க, அவரோ அதை வெறும் மிஷின் என்று கூறி உதாசினப்படுத்துகிறார். பிறகு அந்த ரோபோவின் நடவடிக்கைகள் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடித்துவிட, அதை ஒரு மிஷினாக பார்த்தவர் ஒரு கட்டத்தில் அந்த ரோபோவையும் தனது மகனாக பார்க்க ஆரம்பிக்கிறார். ஊர் மக்களும் அந்த ரோபோவுக்கு குட்டப்பா என்று பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள். அதே சமயம், சோதனை முறையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்ட இத்தகைய ரோபோக்களில், அதனை பயன்படுத்தும் உரிமையாளர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கோளாறு ஒன்று இருப்பது தர்ஷனுக்கு தெரிய வர, அந்த ரோபோவிடம் இருந்து தனது அப்பாவை காப்பாற்ற ஊருக்கு வருகிறார். ஆனால், கே.எஸ்.ரவிக்குமாரோ ரோபோவுடன் உணவுப்பூர்வமாக ஒன்றிவிடுவதோடு, குட்டப்பா இல்லாமல் தான் இல்லை என்ற ரீதியில் இருக்க, அவரிடம் இருந்து ரோபோவை பிரித்து அவரை தர்ஷன் காப்பாற்றினாரா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.

 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சுப்பிரமணி என்ற கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து மொத்த படத்தையும் சுமந்திருக்கிறார். தனது மகன் தன்னிடம் மனம் விட்டு பேசவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார். ரோபோவுக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி பல இடங்களில் நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.

 

கே.எஸ்.ரவிக்குமாரின் மகனாக நடித்திருக்கும் தர்ஷன், பல இடங்களில் தடுமாற்றத்தோடு நடித்திருக்கிறார். ஆனால், அந்த தடுமாற்றங்களே சில இடங்களில் அவருடைய கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துவிடுகிறது. இருந்தாலும் நடிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே தமிழ் சினிமாவில் நடிகராக தர்ஷனால் தொடர்ந்து பயணிக்க முடியும்.

 

லொஸ்லியா தர்ஷனின் காதலியாக வருகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் அவருக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை என்றாலும் கொடுத்த சிறிய வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

குட்டப்பா என்ற கதாப்பாத்திரத்தில் வரும் ரோபோ படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ரோபோவுக்குள் இருக்கும் மனிதர், ஒரு ரோபோவாக தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

 

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.  பூவையார், ராகுல், பிளாக் பாண்டி ஆகியோரும் காமெடி ஏரியாவில் கலக்கியிருக்கிறார்கள்.

 

ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அளவு. ஆர்வியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப உள்ளது. பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதம்.

 

வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்புக்காக ஏங்கும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பதோடு, தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்பவர்களின் தலையில் குட்டும் வைத்திருக்கிறது இந்த குட்டப்பா.

 

தர்ஷன் - லொஸ்ளியா ஜோடியை உப்பு போல பயன்படுத்திவிட்டு கே.எஸ்.ரவிக்குமார் - பவித்ரா ஜோடி மூலம் இயக்குநர்கள் வைத்த காதல் விருந்து ரசிக்கும்படி இருந்தாலும், கொஞ்சம் ஓவராகவும் இருக்கிறது.

 

படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர்கள் சபரி - சரவணன், சமூகத்திற்கு தேவையான மெசஜ் சொன்னாலும், அதை காமெடி, காதல் என்று கமர்ஷியல்  அம்சங்களை சேர்த்து கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

 

மகனின் பாசத்துக்காக ஏங்குவது, எந்திரமாக இருந்தாலும் அதையும் ஒரு மனிதனாக பார்ப்பது, தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பது என்று  கே.எஸ்.ரவிக்குமாரின் கதாப்பாத்திரம் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது போல், சிறுவர்களிடம் படத்தை கொண்டு சேர்ப்பதில் குட்டப்பா ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. 

 

மொத்தத்தில், ‘கூகுள் குட்டப்பா’ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஈர்க்கும்.

 

ரேட்டிங் 3.5/5