Nov 14, 2025 06:54 PM

’கும்கி 2’ திரைப்பட விமர்சனம்

9257bb8c9a82ac465cc2447c5b990954.jpg

Casting : Madhi, Shridha Rao, Andrews, Arjun Dass, Akash, Harish Peradi, Srinath

Directed By : Prabhu Solomon

Music By : Nivas K.Prasanna

Produced By : Jayanthilal Gada, Thaval Gada

 

மலை கிராமத்தில் வாழும்  நாயகன் மதி, சிறு வயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார். 

 

இதற்கிடையே ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்லும் மதிக்கு அவரது யானை கிடைத்ததா ?, யானை மாயமானதன் பின்னணி என்ன ? என்பது தான் ‘கும்கி 2’.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி, தோற்றத்தில் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது, தன்னிடம் இருந்து யானையை பிரிக்க நினைப்பவர்கள் மீது கோபம் கொள்வது என்று பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். 

 

நாயகியாக அல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

 

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் மெலொடி ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா, மலைகளையும், அருவிகளையும் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதே சமயம், வனப்பகுதி காட்சிகளில் சில ஏமாற்று வேலைகள் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

 

காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்து, இயக்குநர் பிரபு சாலமன் சொல்ல நினைத்ததை  பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் புவன்.

 

இயக்குநர் பிரபு சாலமனுக்கு வனமும், யானையும் புதிதல்ல என்பது போல், பார்வையாளர்களுக்கும் இந்த கதை புதிதல்ல. இதே பாணியிலான இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கிறது. இருந்தாலும், அவை இரண்டில் இல்லாத சிறப்பு இதில் இருக்கிறது. 

 

நாயகனுக்கும், யானைக்கும் இடையே இருக்கும் பாசத்தை தாண்டி படத்தில் எதுவும் இல்லாதது பெரும் பலவீனம். அந்த பலவீனத்தை மறைக்க கும்கி யானையின் செயல்பாடு மற்றும் தமிழ்நாட்டு அரசியல் சம்பவங்களை சேர்த்து இயக்குநர் பிரபு சாலமன், எழுதியிருக்கும் திரைக்கதை சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும், காட்சிகளில் அத்தகைய சுவாரஸ்யம் இல்லை. இருப்பினும், குட்டி யானை சிறுவனுடன் நட்பாவது, யானையை வைத்து படமாக்கிய விதம், சில வனப்பகுதி காட்சிகள் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘கும்கி 2’ உருவத்தில் மட்டுமே பெரியது.

 

ரேட்டிங் 3/5