’குயிலி’ திரைப்பட விமர்சனம்

Casting : Lizzie Antony, Thashmiga Lakshman, Puthupettai Suresh, Hello Kanthasamy, Ravicha, VV Arun Kumar
Directed By : P Murugasamy
Music By : Jhoo Smith
Produced By : BM Film International - VV Arun Kumar
மதுப்பழக்கத்தினால் சிறு வயதிலேயே தந்தையை இழந்த குயிலி, மதுப்பழக்கம் இல்லாத காரணத்தால் ரவிச்சாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் ரவிச்சா, திடீரென்று இறந்து விடுகிறார். பல பெண்களை விதவைகளாக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் குயிலி, தனது கிராமத்தில் இருக்கும் மதுக்கடைக்கு தீ வைப்பதோடு, கம்யூனிசக் கட்சி ஒன்றில் இணைந்து மதுவுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், தனது மகனை நன்றாக நடிக்க வைத்து, மாவட்ட ஆட்சியராக்கி சட்டப்படியாகவும் தனது கிராமத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட நினைக்கும் குயிலியின் லட்சியப் பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இளம் வயது குயிலியாக நடித்திருக்கும் தாஷ்மிகா லக்ஷ்மன் மற்றும் முதுமை குயிலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஸி ஆண்டனி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆண்களின் மதுப்பழக்கத்தினால் பாதிக்கப்படும் அப்பாவி பெண்களின் அவலநிலையையும், மனக்குமுறல்களையும் தங்களது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
குயிலியின் மகனாக மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வி.வி.அருண்குமார், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, பதவியும், முன்னேற்றமும் வந்த பிறகு தாயையும் மறந்து போகும் மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில், பார்வையாளர்களுக்கு தன் மீது கோபம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ‘புதுப்பேட்டை’ சுரேஷ், ஹலோ கந்தசாமி, ரவிச்சா, இயக்குநர் பி.முருகசாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன்ராஜ், இசையமைப்பாளர் ஜூ ஸ்மித், படதொகுப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கதைக்களத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்ப குறையின்றி பணியாற்றியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் பி.முருகசாமி, மதுப்பழகத்தினால் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளோடு, அதனை ஒழிப்பதற்கான அவசியத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அரசே நடத்தும் மது வியாபாரத்திற்கு தொடர் அறவழிப் போராட்டங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் முற்றுப்புள்ளி வைப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்றாலும், அதை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சியாக தனது முதல் படத்தை இயக்கி இருக்கும் பி.முருகசாமியின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும், அவர் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்து சமூகத்திற்கு மிகவும் தேவையானது.
மொத்தத்தில், ‘குயிலி’ சமூகத்திற்கான படைப்பு.
ரேட்டிங் 2.5/5