Sep 10, 2021 06:31 AM

‘லாபம்’ விமர்சனம்

a82225d24786d00e3480469454144fae.jpg

Casting : Vijay Sethupathi, Shruthi Hassan, Jegapathi Babu, Sai Dhanshika, Kalaiyarasan

Directed By : SP Jananathan

Music By : D.Imman

Produced By : Vijay Sethupathi and Arumuga Kumar

 

தனது ஒவ்வொரு படங்களிலும் பொதுவுடமை பற்றி பேசும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இப்படத்தில் பொருளாதாரத்தைப் பற்றி பேசுவதோடு மட்டும் இன்றி, அந்த பொருளாதாரத்தின் ஆரம்பமே விவசாயிகள் தான், என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார்.

 

பக்கிரி என்ற வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விவசாயிகளை ஒன்றினைத்து கூட்டுப்பண்ணை முறை விவசாயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த விவசாய நிலங்களை கைப்பற்றி பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலையை அங்கு கட்டும் முயற்சியில் வில்லன் ஜெகபதிபாபு இறங்க, அவரிடம் இருந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் விஜய் சேதுபதி மீட்டாரா, இல்லையா என்பது தான் கதை.

 

விவசாயிகள் பிரச்சனையைப் பற்றி பேசும் படம், என்று சொல்லி எளிமையாக கடந்து போக முடியாத ஒரு படம். விவசாயிகள் என்றால் யார்? அவர்கள் இல்லை என்றால், உணவு மட்டும் அல்ல, நாட்டின் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட இயங்க முடியாது, என்பதை மிக அழுத்தமாகவும், எளிமையாகவும் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

 

கறிக்கடை பக்கிரிசாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, காரல் மார்க்ஸ் கெட்டப்பில் அறிமுகமாகி, பிறகு இயல்பான தோற்றத்தில் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து பேசி அதிரடி காட்டுகிறார். இறுதியில் நீலகிரி தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட செல்கிறேன், என்று கூறி சேகுவேராவை நினைவுப்படுத்துகிறார்.

 

ஒரு பாட்டு, சில காட்சிகள் என்று விஜய் சேதுபதிக்கு உதவியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசனின் கதாப்பாத்திரம் படத்திற்கும் உதவியாக இருக்கிறது.

 

தொழிலாளிகளை சுரண்டும் கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் ஜெகபதிபாபு, விஜய் சேதுபதியின் நண்பர்களாக நடித்திருக்கும் கலையரசன், ரமேஷ் திலக், டேனி, நித்தீஷ் வீரா, பிருத்வி பாண்டியராஜன், ஜெய்வர்மன், சாய் தன்ஷிகா என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ராம்ஜியின் ஒளிப்பதிவும், டி.இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

கார்ப்பரேட் என்பது பொதுமக்களை மட்டும் இன்றி, தொழில்துறை மற்றும் முதலாளிகளையும் அழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர், பஞ்சமி நிலம் மீட்பு, பொதுத்துறை சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படுவதில் நடக்கும் மோசடி என நாட்டில் நடக்கும் அத்தனை சம்பவங்களின் பாதிப்புகளை பற்றி பேசுவதோடு, அவற்றில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கூட்டுப்பண்ணை முறையில் விவசாயம் செய்ய வேண்டும், என்றும் கூறுகிறார்.

 

இறுதியாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் அத்துமீறினால், அவர்களை எதிர்க்க ஆயும் எடுப்பது தவறில்லை, என்று சொல்லும் இயக்குநர், படத்தின் வில்லனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை சற்று கொடூரமாக இருந்தாலும், சரியானதாகவே இருக்கிறது.

 

மொத்தத்தில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இந்த ‘லாபம்’ மக்களுக்கான படம்.

 

ரேட்டிங் 4/5