Nov 05, 2022 05:54 AM

’லவ் டுடே’ திரைப்பட விமர்சனம்

70fadc0b1ad892a349e2917008a58bfe.jpg

Casting : Pradeep Ranganathan, Sathyaraj, Yogi Babu, Ivana, Radhika Sarathkumar, Raveena

Directed By : Pradeep Ranganathan

Music By : Yuvan Shankar Raja

Produced By : AGS Entertainment

 

நாயகன் பிரதீப் ரங்கநாதனும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதல் விவகாரம் இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வர, அவர் காதலுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் போடுகிறார். அதை ஏற்றுக்கொண்டால் அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ரெடி, என்று சொல்கிறார். அவர் சொன்னபடி  இருவரும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள,  அதுவே அவர்களது காலுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? சத்யராஜ் போட்ட நிபந்தனை என்ன? என்பதை இளைஞர்கள் கொண்டாடும் வகையில் ஜாலியாக சொல்வது தான் ‘லவ் டுடே’.

 

முதல் படத்தில் இயக்குநராக வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், இரண்டாவது படத்தில் இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். தனக்கு ஏற்ற வேடத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் பிரதீப் ரங்கநாதன், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருந்தாலும், தனுஷ் மற்றும் ரகுவரனின் சாயலை தன் நடிப்பில் கொண்டு வந்ததை தவிர்த்திருக்கலாம். இருப்பினும், அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அதில் வெளிப்படுத்திய நடிப்பு கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை படத்துடன் எளிதில் ஒன்றிவிட செய்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் இவானா, முதல் படத்திலேயே பலமான வேடத்தில் பலே...சொல்லும் வகையில் நடித்திருக்கிறார். நாயகனுக்கு இணையாக கதையை சுமந்திருப்பவர், காதல், மகிழ்ச்சி, துக்கம், கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிடுகிறார்.

 

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சத்யாரஜ், தனது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பாதோடு, தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் காதலும், பிரிவும் எவ்வளவு எளிதாக நடக்கிறது,  என்பதை தெளிவாக புரிய வைக்கிறார்.

 

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, செல்போனை பயன்படுத்தும் பிள்ளைகளை கண்டிக்கும் அம்மாவாக அறிமுகமாகி, கலகலப்பான நடிப்பு மூலம் நம்மை அவ்வபோது சிரிக்க வைப்பவர், தனது மகனுக்கு ஆறுதல் சொல்வதோடு அட்வைஸ் பண்ணும் காட்சிகளில் நிமிர்கிறார்.

 

யோகி பாபுவை காமெடிக்காக மட்டுமே பயன்படுத்தாமல் அவர் மூலம் உருவ கேலி செய்பவர்களுக்கு  சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால்,  யோகி பாபுவே பல படங்களில் பலரை உருவ கேலி செய்து தான் காமெடி செய்கிறார். இந்த படத்திற்கு பிறகாவது அதை யோகி பாபு கைவிடுவாரா, என்று பார்ப்போம்.

 

யோகி பாபுக்கு ஜோடியாக  நடித்திருக்கும் ரவீனா, நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் அளவான நடிப்பும் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் கதையோடு பயணிப்பதோடு, கடற்கரை காட்சியை ரசிக்கும்படி படமாக்கியுள்ளார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்பது டைடில் கார்டில் மட்டுமே தெரிகிறது, பாடல்களில் தெரியவில்லை. ஆனால், பின்னணி இசை, காதல், காமெடி, செண்டிமெண்ட் என  அனைத்துவிதமான உணர்வுகளையும் ரசிகர்களிடம் கடத்தும்படி இருக்கிறது.

 

சாதாரண காட்சிகளை  கூட ரசிகர்கள் கவனிக்கும்படி படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகன். படத்தில் பெரும்பாலான காட்சிகள் உரையாடல்களாக இருந்தாலும், அதையும் வேகமாக நகர்த்தி, படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார்.

 

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய ’அப் (பா) லாக்’ என்ற குறும்படத்தை தான் முழுநீள திரைப்படமாக இயக்கியிருக்கிறார். ஆனால், கதைக்களத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல், சுமார் இரண்டரை மணி நேரம் ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும்  விதத்தில் திரைக்கதையை மிக சிறப்பாக எழுதியிருக்கிறார்.

 

தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களுடைய காதலையும் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், சோசியல் மீடியா மூலம் பெண்களுக்கு நடக்கும் தீமைகளையும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற தீர்வையும் பாடம் நடத்துவது போல் இல்லாமல், மிக இயல்பாகவும் அதே சமயம் மிக அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் ஜாலியான வாழ்க்கை, காதல், அந்த காதலை பெற்றோர்கள் பார்க்கும் விதம், காதலர்களுக்கு இடையே ஏற்படும் சந்தேகம் என படத்தின் முதல் பாதி ஜாலியாக நகர்ந்தாலும் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல் படத்தின் க்ளைமாக்ஸும் வழக்கமான காதல் படங்களை போல் இருப்பதும் படத்திற்கு சற்று பலவீனம்.

 

சத்யாரஜ் போடும் நிபந்தனையை காதலர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு சூடு பிடிக்கும் படம் ஜெட் வேகத்தில் பயணிப்பதோடு, நாயகன் மற்றும் நாயகியின் தவிப்பும் அதில் அவர்கள் வெளிப்படுத்தும் நடிப்பும், நம்மையும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வைப்பதோடு, படத்தை கொண்டாடவும் வைக்கிறது.

 

முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படமாக இருந்தாலும், பெரியவர்களும் சேர்ந்து பார்க்கும் விதத்தில் பல ஆழமான விஷயங்களை அசால்டாக பேசியிருக்கும் பிரதீப் ரங்கநாதன் இயக்குநராகவும், நடிகராகவும் ரசிக்க வைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘லவ் டுடே’ காதலர்களுக்கான புரிதல்.

 

ரேட்டிங் 3.5/5