‘மாமரம்’ திரைப்பட விமர்சனம்

Casting : Jaiakash, Meenakshi, Nisha, Kadhal Suhumar, KPY Diwakar, Rahul Dev, Brammaji, Arunachalam, Madurai Sakthivel, Brammanandam, Basha, Sathyam Rajesh, Ramya
Directed By : Jaiakash
Music By : Nantha and Jai Harishanth
Produced By : Jaiakash Films
காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், அதே காதலி சொன்னதால் ஒரு மாமரத்தை தனது காதல் நினைவாக பாதுகாத்து வளர்ப்பதோடு, அந்த மாமரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார். அது ஏன் ?, துரோகம் செய்த காதலி மீதும், காதல் மீதும் ஜெய் ஆகாஷுக்கு இருந்த கோபம் போனதற்கு காரணம் என்ன ? என்பதை மாமரத்தின் கிளைகள் போல், பல கிளைக்கதைகளுடன் சொல்வதே ‘மாமரம்’.
ஜெய் ஆகாஷ், இப்போது எப்படி இருக்கிறார், என்பது தெரியாது. ஆனால், இந்த படத்தில் இளம் வயது ஜெயம் ரவி போன்ற இளமை தோற்றத்துடனும், பழுத்த பழமாகவும், ஆக்ரோஷமான மனநலம் பாதிக்கப்பட்டவர், என்று மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். காதலர்களிடம் அவர் காட்டும் வெறுப்பு நமக்கு சிரிப்பை வரவைக்கிறது. மாமரத்திற்கும் காட்டும் அக்கறையும், அன்பும் வியப்பை தருகிறது.
நாயகிகளாக நடித்திருக்கு மீனாட்சி, சந்தியா இருவரும் கவர்ச்சி, நடிப்பு என இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்கள்.
காதல் சுகுமார், கே.பி.ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா என தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக கலைஞர்களின் கலவை படத்தை கலர்புல்லாக்கியுள்ளது.
ஒளிப்பதிவாளர் பவுல் பாண்டி, இசையமைப்பாளர் நந்தாவின் பாடல்கள், ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசை, ஏ.சி.மணிகண்டனின் படத்தொகுப்பு அனைத்துமே நிச்சயம் சவால் நிறைந்த பணியாக இருக்கும் என்பது படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜெய் ஆகாஷ், கதை மற்றும் திரைக்கதை எழுதிவிட்டு காட்சிகளை படமாக்காமல், காட்சிகளை படமாக்கிவிட்டு பிறகு அவற்றின் மூலம் ஒரு கதையை உருவாக்கியிருப்பதால், ஒன்றுக்கும் மேற்பட்ட படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஒற்றை மாமரம்.
ஜெய் ஆகாஷ் யார் ?, அவரது படங்கள் எப்படி இருக்கும், என்பது நமக்கு தெரிந்தது என்றாலும், இப்படிப்பட்ட ஒரு படத்தை அவரிடம் இருந்து நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு வித்தியாசமான முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை மற்றும் கதை சொல்லலை அவர் கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மாமரம்’ இன்னும் வளரும்.
ரேட்டிங் 2.5/5