’மரியா’ திரைப்பட விமர்சனம்

Casting : SaiShri Prabhakaran, Pavel Navageethan, Sidhu Kumaresan, Vignesh Ravi, Balaji Velan, Sudha Pushpa, Abinaya
Directed By : Hari K Sudhan
Music By : Aravind Gopalakrishnan & Bharath Sudharshan
Produced By : Hari K Harasudhan
கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். அங்கு சில நாட்கள் தங்கும் அவர் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது குடும்பம் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை வீட்டை விட்டு துரத்தி விடுகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை வெறுக்கும் அவர், அதற்கு எதிரான சாத்தானை வழிபடும் குழுவுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, சாத்தான் வழிபாடு என்றால் என்ன?, அதன் பின்னணி என்ன ? என்பதை விரிவாக சொல்வது தான் ‘மரியா’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், சர்ச்சையான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பவர், படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், படம் முழுவதும் நன்றாக பேசியிருக்கிறார். பக்கம் பக்கமான வசனங்களை எவ்வித தடுமாற்றம் இன்றி பேசி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியின் உறவினராக நடித்திருக்கும் சிது குமரேசன், அவரது காதலராக நடித்திருக்கும் விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வசனம் இல்லாத காட்சிகள் நீளமாக இருந்தாலும், அதற்கு பின்னணி இசை உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி, கூடுதல் ஒளி இன்றி இருக்கும் ஒளியை வைத்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வு பார்வையாளர்களிடம் ஏற்படாத வகையில் கதாபாத்திரங்களின் நடிப்பு, உடல் மொழி ஆகியவற்றின் மீது பார்வையாளர்கள் கவனம் திரும்பும் வகையில் கேமரா கோணங்களை கையாண்டிருக்கிறார்.
மெதுவாக பயணிக்கும் திரைக்கதை, நீளமான காட்சிகள் என்று படம் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், படத்தொகுப்பாளர்கள் காமேஷ்.கே மற்றும் நிஷால் ஷெரிப்.ஏ, இயக்குநர் சொல்ல வரும் விஷயத்தை பார்வையாளர்களிடம் கடத்தும் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி கே.சுதன், சர்ச்சையான விசயத்தை தைரியமாக சொல்லியிருக்கிறார் என்பதை விட ஒரு மதத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கன்னியாஸ்திரியாக இருக்க ஒரு பெண்ணை கிறிஸ்தவ மதம் நிர்பந்திக்கிறது, என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் சாத்தான் என்ற மதம் மற்றும் லூசிபர் போன்றவர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
ஒரு பெண்ணின் மனதையும், அவரது உணர்வுகளையும் பேசும் படமாக முதல் பாதி நகரும் போது கவனம் ஈர்க்கும் படமாக இருக்கிறது. அதே சமயம், இரண்டாம் பாதியில் பாலியல் உறவுக்கு ஏங்கும் பெண், அது கிடைக்காத நிலையில் மதத்தை வெறுத்து வேற்று வழியில் பயணிப்பது என்று கதையை மாற்று வழியில் பயணிக்க வைத்து படத்தை பலவீனமாக்கிவிடும் இயக்குநர் ஹரி கே.சுதன், மதம் வேறுபாடு பார்க்காமல் அனைத்து மதத்தினரும் வழிபடும் அன்னை மரியாவை களங்கப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மரியா’ களங்கம்.
ரேட்டிங் 2.3/5