Sep 15, 2023 06:27 PM

’மார்க் ஆண்டனி’ திரைப்பட விமர்சனம்

b4791c6bca69390f9badfffad923a6e6.jpg

Casting : Vishal, S.J.Suryah, Selvaraghavan, Suneel, Ritu Varma, Abhinaya, Redin Kingsley, Y.Gee.Mahendran, Nizhalgal Ravi, Sendrayan, Vishnu Priya Gandhi, Dato Sri G Gnanaraja

Directed By : Adhik Ravichandran

Music By : GV Prakash Kumar

Produced By : Mini Studio - S.Vinod Kumar

 

எதிரிகளால் பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பெரிய ரவுடியான அப்பா விஷாலை மகன் விஷாலுக்கு பிடிக்காது. காரணம் அவர் ரவுடி என்பது மட்டும் அல்ல தனது அம்மாவையும் அவர் தான் கொலை செய்தார் என்பதால். தந்தை விஷாலின் உயிர் நண்பரான மற்றொரு ரவுடியான எஸ்.ஜே.சூர்யா, மகன் விஷாலை வளர்ப்பதோடு, தனது மகன் எஸ்.ஜே.சூர்யாவை விட விஷால் மீது அதிகம் பாசம் கொண்டவராக இருக்கிறார். இதனால், மகன் எஸ்.ஜே.சூர்யா, அப்பா எஸ்.ஜே.சூர்யாவை வெறுக்கிறார்.

 

இந்த நிலையில், விஷாலுக்கு இறந்த காலத்திற்குப் பேசும் அதிசய தொலைபேசி ஒன்று கிடைக்கிறது. அதை வைத்து தனது அப்பாவிடம் பேசி அவரை திட்ட முடிவு செய்யும் விஷால், கூடவே தனது அம்மாவிடவும் பேச முயற்சிக்கிறார். அப்போது அப்பா நல்லவர் அல்ல கெட்டவர், என்று அம்மாவுக்கு தெரியப்படுத்தும் போது, அவரது அம்மா விஷாலை திட்டுகிறார். இதனால் குழப்பமடையும் மகன் விஷால், தனது தந்தை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குவதோடு, அதற்காக இறந்தகாலத்துக்கு பேசக்கூடிய அதிசய தொலைபேசியை பயன்படுத்துகிறார். அதனால், இவர்கள் நான்கு பேரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது?, இதில் யார் கெட்டவர்?, யார் நல்லவர்?, விஷாலின் அம்மாவை கொன்றது யார்?, அப்பா எஸ்.ஜே.சூர்யா தனது மகனை விட விஷால் மீது அதிகம் பாசம் காட்டுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கான பதிலை பலவித மாசாலாவை கலந்து, இளைஞர்களுக்கான மஜா டானிக்காக கொடுக்கும் வகையில் சொல்வது தான் ‘மார்க் ஆண்டனி’.

 

ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் விஷால் வரும் காட்சிகள் அனைத்தும் மாஸ். சண்டைக்காட்சிகளில் ஆண்டனியாக தெறிக்கவிடும் விஷால், வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு அமர்க்களப்படுத்துகிறார். மகன் மார்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால், தந்தை வேடத்திற்கு எதிர்மறையான சாதுவான வேடம் என்பதால், அடக்கி வாசித்திருப்பதோடு, நடிப்பு வித்தையை மொத்தமாக இறக்கு முயற்சித்திருக்கிறார். ஆனால், அதில் இயல்பாக அல்லாமல் கஷ்ட்டப்பட்டு நடித்திருப்பவர் சில இடங்களில் சொதப்பவும் செய்திருக்கிறார்.

 

நாயகன் விஷாலை விட பல இடங்களில் எஸ்.ஜே.சூர்யா ஜொலிக்கிறார். அவரது வழக்கமான நடிப்பு மூலம் அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரங்களையும் கையாண்டிருந்தாலும், அவரது ஒவ்வொரு அசைவும் திரையை ஆக்கிரமித்து ரசிகர்களை ஆர்பரிக்க செய்கிறது. அதிலும், தந்தை மற்றும் மகன் எஸ்.ஜே.சூர்யா இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல் காட்சி ரசிகர்களை எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. இப்படி படம் முழுவதும் அப்பா மற்றும் மகனாக பலவிதங்களில் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு மிகப்பெரிய தூணாக நிற்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மாவுக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். அதனால் அவர் வரும் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை.

 

ஆரம்ப காட்சியில் அதிரடியாக எண்ட்ரி கொடுக்கும் சுனில் கதாபாத்திரம் அடுத்தடுத்த காட்சியில் டம்மியாக்கப்பட்டு விடுகிறது. படம் முழுவதும் அவர் இருந்தாலும் அவருக்கு படத்தில் பெரிய வாய்ப்பு இல்லை.

 

ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

 

இரண்டு ரவுடிகளுக்கு இடையிலான நட்பு மற்றும் துரோகம் என்ற வழக்கமான ஃபார்மட்டை வைத்துக்கொண்டு, டைம் டிராவலர் தொலைபேசி என்ற புதிய யோசனையோடு, முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான கமர்ஷியல் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயககுநர் ஆதிக் ரவிச்சந்திரன், அதை ரெட்ரோ டோன் பின்னணியில் சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் மாஸாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளை மிரட்டளாக படமாக்கியிருக்கிறது. அதிலும், ரெட்ரோ டோன் பின்னணியில் முழு படத்தையும் பொருத்தி, அதனுடன் நாமும் பயணிக்கும் ஒரு அனுபவத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால், பின்னணி இசையில் இரண்டு மடங்காக வேலை செய்து ரசிகர்களை திருப்தியடைய செய்வதோடு, 80ம் காலக்கட்ட பாடல்களை காட்சிகளுடன் கச்சிதமாக பொருத்தி காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறார்.

 

இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் போக கூடியது டைம் டிராவலர் என்பது நமக்கு தெரியும். ஆனால், இது அதில் இருந்து முற்றியிலும் வித்தியாசமான டைம் டிராவலர் தொலைபேசி. இதன் மூலம் நாம் பயணிக்க முடியாது, நமது குரல் மட்டுமே பயணிக்கும் அதுவும் இறந்தகாலத்திற்கு மட்டுமே, என்ற படத்தின் மையக்கருவை ரசிகர்களுக்கு மிக சரியாக புரிய வைக்கும் விதத்தில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி, படத்தை வேகமாகவும் நகர்த்தி படத்துடன் நம்மை கட்டுப்போட்டு விடுகிறார்.

 

சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயண், கலை இயக்குநர் ஆர்.கே.விஜய்முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா.என்.ஜே மற்றும் ஒப்பனை கலைஞர் சக்தி ஆகியோர் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இவர்களது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

மாஸான கதைக்களத்தை அறிவியல் ஜானரில் பொருத்தி அதை ஃபேண்டஸி முறையில் காட்சிப்படுத்தி, முழு படத்தையும் தொய்வில்லாமல் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், டைம் டிராவலர் தொலைபேசி என்ற புதிய ஐடியாவை வைத்துக்கொண்டு ரசிகர்களை ஈர்த்துவிடுகிறார்.

 

இரண்டரை மணி நேரம் போனதே தெரியாதபடி, ரசிகர்கள் கொண்டாட்ட உணர்வோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சில இடங்களில் லாஜிக் மீறல்களை கூட உதாசினப்படுத்தி ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘மார்க் ஆண்டனி’ பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படத்தை விரும்பும் மக்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறான்.

 

ரேட்டிங் 3.8/5