Nov 21, 2025 05:22 AM

’மிடில் கிளாஸ்’ திரைப்பட விமர்சனம்

faaafc2f9c70937f308f9f6d7182a6b4.jpg

Casting : Munishkanth, Vijayalakshmi, Kali Venkat, Radha Ravi, Kuraishi, Malavika Avinash, Kodangi Vadivelu, Vela Ramamoorthy

Directed By : Kishore Muthuramalingam

Music By : Pranav Muniraj

Produced By : Good Show, Axes Film Factory - Dev, KV Durai

 

நடுத்தரக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் பற்றாக்குறையே மிக முக்கியமான காரணமாக இருக்கும். பணம் இருந்தால் நடுத்தரக் குடும்பத்தின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடலாம். அப்படிப்பட்ட நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் முனீஷ்காந்த் - விஜயலட்சுமி தம்பதிக்கு, தங்களது பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தனது அஜாரக்கிரதையால் முனீஷ்காந்த், அந்த வாய்ப்பை இழந்து விடுகிறார். இதனால், குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இழந்த வாய்ப்பை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் அதில் வெற்றி பெற்றாரா ?, இல்லையா ? என்பதை, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையாகவும், சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சொல்வது தான் ‘மிடில் கிளாஸ்’.

 

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்திருந்தாலும், அதற்காக எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான நடிப்பை கொடுத்து தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

கதையின் நாயகியாக, முனீஷ்காந்தின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்ப பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்து எதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறார்.

 

காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளியாக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களும் அறம் மற்றும் மனிதம் போற்றும் மக்களாக வலம் வந்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

 

இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை எந்தவித கலப்படமும் இன்றி நம் கண் முன் நிறுத்தி இருக்கிறது.

 

குடும்ப நாடக பாணியிலான கதை என்றாலும், அதை பரபரப்பாக நகர்த்தி செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற கேள்வியோடு சில இடங்களில் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை வைத்து கம்யூனிசம் பேசியிருக்கிறார். தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், அதை பிறர்க்கு பகிர்ந்தளித்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை, என்ற கருத்தை பல குறியீடுகள் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, எளிமையான முறையில் அனைத்து தரப்பினருக்கும் புரிய வைத்திருக்கிறார்.

 

எளிமையான கதை மற்றும் யூகிக்கும்படியான திரைக்கதையாக இருந்தாலும், திரை மொழியில் சற்று சுவாரஸ்யமாக சொன்னதோடு, அறம் மற்றும் மனிதத்தை வலியுறுத்தும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை வடிவமைத்து, பார்வையாளர்களுக்கு நேர்மறை சிந்தனையை விதைத்திருக்கிறார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்.

 

ஒரு சாதாரண பொருள் கையில் இருந்தாலே அதை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் அல்லது உரிய இடத்தில் சேர்க்க வேண்டும், என்பதில் அதிகம் முனைப்பு காட்டுவது தான் நடுத்தரக் குடும்பங்களின் மனநிலையாக இருக்கும். அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு தங்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு மாயாஜாலம் கையில் கிடைத்தால், அதை தங்களது கண்களை விட மேலாக பாதுகாப்பது தான் நடைமுறை. ஆனால், கதைக்கருவே அந்த நடைமுறையில் இருந்து விலகியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 

 

மொத்தத்தில், ‘மிடில் கிளாஸ்’ நடுத்தரம்.

 

ரேட்டிங் 3/5