Nov 01, 2025 07:18 AM

‘மிலாதுன் நபி’ ஏஐ டாக்குமெண்டரி பட விமர்சனம்

9e475bbaffcb040bad23d03f9ee5a6e8.jpg

Casting : Storytellers - Imam Abdul Kaiyum, Imam Umar, Imam Sadaqallah

Directed By : Millat Ahmad

Music By : SR Ram

Produced By : Millat Ahmad

 

பூமியில் ஆதாம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இறை தூதர்கள் அவதரித்துள்ளதாக நம்பப்படுகிறது. குறிப்பாக ஏசு, நபிகள் நாயகம் ஆகியோர் மூலம் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. இதில், இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம், கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட இறை தூதர்களில் கடைசியானவர், என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள், அதற்கான குறிப்புகள் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பாகவே பல மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அத்தகைய நபிகள் நாயகத்தின் சிறுவயது முதல் அவரது மறைவு வரையிலான வாழ்க்கை தான் ‘மிலாதுன் நபி’.

 

இமாம் அப்துல் கையூம், இமாம் உமர், இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் நபிகள் நாயகத்தின் குழந்தை பருவம் முதல் இறுதிக்காலம் வரையிலான கதையை விவரிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாக்குமெண்ட்ரி படம், ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களோடு, தற்போதைய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

 

முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்தவர்களுக்கு காட்சி மொழியின் மூலம் வியப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் மில்லத் அகமது , முகமது  நபிகள் யார் ? , இஸ்லாம் மதம் எப்படி தோன்றியது ? என்பது பற்றி அறியாதவர்களுக்கு, ஒரு புத்தகம் படித்த அனுபவத்தோடு, ஒரு மதம் மற்றும் அதன் தலைவரின் வாழ்க்கையை கண் முன் பார்த்த அனுபவத்தையும் காட்சிகள் மூலம் கொடுத்திருக்கிறார்.

 

எஸ்.ஆர்.ராம் இசையில், மில்லத் அகமதுவின் வரிகளில், நாகூர் ஹனிபாவின் மகன் நெளஷாத், பாடகர் சாகுல் ஹமீது தம்பி சம்சுதீன், யூடியூப்  புகழ் ரஹீமா, விஜய் சூப்பர் சிங்கர் பரிதா ஆகியோரது குரலில் இடம்பெற்றுள்ள 10 பாடல்களும் கதை சொல்லலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. திரைப்படங்களில் பாடல் வந்தாலே ரசிகர்கள் எழுந்து செல்லும் தற்போதைய காலக்கட்டத்தில் 10 பாடல்களை வைத்து, அதை திரைக்கதையோடு பின்னி பிணைந்து பயணிக்க வைத்து, பார்வையாளர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மில்லத் அகமது.

 

லலித் ராகவேந்தரின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு எந்தவித உறுத்தல் இல்லாமல் காட்சிகளை நகர்த்திச் செல்வதோடு, நபிகள் நாயகத்தின் கதை விவரிப்பு மற்றும் அதனுடன் இடம்பெறும் காட்சிகளை மிக கச்சிதமாக தொகுத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

 

திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, செயற்கை நுண்ணறிவு (AI) காட்சிகளை வடிவமைத்து இயக்கி தயாரித்திருக்கும் இயக்குநர் மில்லத் அகமது, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை திரைப்படமாக மட்டும் இன்றி, இஸ்லாமியர்களுக்கு இருக்கும் பல கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வாகவும் இப்படத்தை கையாண்டுள்ளார். குறிப்பாக நபிகள் நாயகத்தின் 11 திருமணங்கள் மற்றும் இஸ்லாம் மதத்தில் ஒருவர் 4 திருமணங்கள் வரை செய்யலாம், என்ற கோட்பாட்டின் பின்னணி மற்றும் புரிதலை மிக தெளிவாக விவரித்து, ஒருவனுக்கு ஒருத்தி, என்பதே இஸ்லாத்தின் முக்கிய கோட்பாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

ஒரு மதம் மற்றும் அதன் இறை தூதர் பற்றிய ஒரு டாக்குமெண்டரி படமாக இருந்தாலும், அந்த கதையை சொல்லிய விதம் மற்றும் அதற்கான காட்சிகள், பாடல்களை படமாக்கிய விதம் ஆகியவை ஒரு முழுமையான திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘மிலாதுன் நபி’ டாக்குமெண்டரி பட உலகின் புதிய புரட்சி.

 

ரேட்டிங் 3/5